தமிழர்களின் இன விகிதாசாரம் குறைகிறது!

102 0

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை பெருமளவில் குறைத்த மகாவலி அதிகாரசபை  தற்போது   வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைப்பதற்கு தொடர்ச்சியாக செயற்பட்டு   வருவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்..பி. சார்ள்ஸ் நிர்மலநாதன்  குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11)  இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள்  மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குற்றம்சாட்டினார்.

மன்னார் மாவட்டத்தில் 30,000 ஏக்கர் நெல்  உற்பத்திக்கு நீர்ப்பாசனமாக பயன்படுத்தப்படும் பிரதான குளம் கட்டுக்கரைக்குளம். இந்தக்குளத்திற்கு கீழ் 162 சிறிய குளங்கள் உள்ளன. அந்த சிறிய குளங்கள்  ஊ டாகத்தான் நெற்பயிர் செய்கை, விவசாயத்திற்கு நீர் வழங்கப்படுகின்றது. கட்டுக்கரைக்குளத்திற்கான நீர் வரத்து வாய்க்கால் 28 கிலோ மீற்றர் கடந்த 30,40, வருடங்களாக துப்புரவு செய்யப்படவில்லை. இதனால் நீர் வரத்து  தாமதப்படுகின்றது. அத்துடன் நீர்  வேறு இடங்களுக்கும் செல்லும் நிலையும் ஏற்படுகின்றது. இந்த விடயத்தில்  கவனம் செலுத்த வேண்டும்.

கட்டுக்கரைக்குளத்தைப்பொறுத்தவரையில் சிறுபோக செய்கைக்கு நீர்பற்றாக்குறையுள்ளது மழைக்காலத்தில் இந்தக்குளத்துக்கு வரும் நீர்  கடலுக்கு செல்கின்றது. எனவே கட்டுக்கரை குள த்தை 2 அடிஉயர்த்த வேண்டும்.

சமல் ராஜபக்ச லோக மல்வத்து ஓயா திட்டத்தை ஆரம்பித்தார். குறிப்பாக வவுனியா மாவட்ட மக்களுக்கு குடி நீருக்காகவும் மன்னார் மாவட்டத்தின் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும் அந்த  ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடி யாழ் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மகாவலி அதிகாரசபை  வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் 1988 ஆம் ஆண்டு எல் வலயமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டு  35 வருடங்கள் முடிந்துள்ளது. இக்காலப்பகுதியில்  தமிழர்களின் பல்வேறு பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டு தென்பகுதி மக்களுக்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன .

இந்த மகாவலி அதிகாரசபை  கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை பெருமளவில் குறைத்திருக்கின்றது அதேபோல் தற்போது   வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைப்பதற்கு தொடர்ச்சியாக செயற்பட்டு  வருகின்றது. இந்த 35 வருடங்களில் இன்று வரை  இந்த மாவட்டங்களில்  ஒரு தமிழருக்கு கூட மகாவலி  அதிகாரசபையின் அனுமதிப்பத்திரம்  கிடைக்கவில்லை என்றார்.