மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையில் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது.
இந்த திட்டத்தினால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக்குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் என்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்விக இடமான வவுனியா செட்டிகுளம் பகுதியில் கப்பாச்சி என்ற பிரதேசத்தில் காணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது என தமிழ் தேசியமக்கள் முன்னணியின் எம்.பி. .யான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு யு.என்.டி.பி. நிறுவனம் நிதிஉதவி செய்கின்றதா?இந்த திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களுக்கு ஐ.நா. நிறுவனங்கள் துணை புரிகின்றனவா? என கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
போரால் அழிக்கப்பட்ட எமது தேசத்தில் விவசாயத்தை கட்டி எழுப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கு,கிழக்கை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக பிரகடனப்படுத்தி விசேடமான நிதி ஒதுக்கீடுகள் மூலமும் விசேட சலுகைகளை அறிமுகப்படுத்தியும் விவசாயத்துறை, வர்த்தகத்துறை, கடற்தொழித்துறை, உற்பத்தித்துறையை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட .வேண்டும்
வடக்கு முற்றாக அழிக்கப்பட்டு அந்த மக்களின் பொருளாதாரம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கோடு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.
உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா பகுதியில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த கொக்குத்தொடுவாய் மேற்கில் இருக்கக்கூடிய 7 கிராம சேவையாளர் பிரிவுகளில் 1984 ஆம் ஆண்டு பலவந்தமாக தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் .அவர்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை.அவர்களின் இடங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். முந்திரிகைக்குளம், ஆமையன்குளம், அரியகுண்டான் குளம் ,சிலோன் தியேட்டர் உள்ளிட்ட குளங்கள் மிகவும் வளமான விவசாய நிலங்களையுடைய குளங்கள்.
இந்தப்பகுதிகளில் சிங்களவர் குடியேற்றப்பட்டுள்ளதோடு அந்தப்பகுதிகளை போருக்கு பின்னர் அபிவிருத்தி செய்வதற்கானான 7000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அபிவிருத்திக்காக ஒட்டு மொத்த வடக்கு மாகாணத்திற்கே இந்தளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்றார்.