தண்டையார்பேட்டையில் நடைபெற்ற மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்க அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்ற மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசியதாவது:-சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்க திட்டத்துக்கு நடைபெறும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த முறை முதல்-அமைச்சரை சந்தித்தபோது மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் பற்றி விவாதித்தோம்.
இந்த திட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக உடனே நான் எங்கள் துறையினருடன் ஆலோசித்து ஒப்புதல் அளித்தோம். அதைத் தொடர்ந்து நிதித்துறை ஒப்புதலும் கிடைத்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதனால் தற்போது மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கான பூஜை நடக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். வடசென்னை மக்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட இத்திட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும்.
இது மக்களுக்கு பெரிதும் உதவுகிற திட்டமாகும். இத்திட்டம் ரூ.3,770 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக மத்திய அரசும், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு கடன் முகமை சேர்ந்து ரூ.10 ஆயிரம் கோடியை வழங்கி உள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 316 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பணிகள் முடிக்கப்பட்டு மெட்ரோ ரெயில்கள் ஓடுகின்றன.
553 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர 550 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிக்கு ஒப்புதல் வழங்க திட்டம் பரிசீலனையில் உள்ளது.சென்னையை பொறுத்த வரை மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்படுகிறார்.
தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். மாநில அரசு வளர்ச்சி பெறும்போதுதான் நாடு வளர்ச்சி அடையும்.எனவே மத்திய அரசும், மாநில அரசும் அரசியல் வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். நாட்டின் வளர்ச்சி பற்றியே பிரதமர் மோடி சிந்திக்கிறார்.
உலக அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் இந்தியா பிரகாசமான நிலையில் உள்ளது. தமிழக அரசும், பிரகாசமான நிலையை நோக்கி செல்கிறது. மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். அதுபோல் மத்திய அரசும், தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதில் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.