தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்

119 0

நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய அஞ்சல் அலுவலகங்களை அரசாங்கம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்னும் பல கோரிக்களை முன்வைத்தும் தபால் திணைக்கள ஊழியர்கள் இவ்வாறு நேற்று  நள்ளிரவு 12.00 மணி முதல் 48 மணித்தியாலய பணிபகிஷ்கரிப்பில் நாடு முழுவதிலும் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு பிரதம தபால் நிலையம் உட்பட மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தபால் அலுவலகங்கள் உப தபால் அலுவலகங்கள் செயலிழந்து காணப்பட்டன.

தபால் விநியோகம் உட்பட அனைத்து நடவடிக்கைககளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன. தபால்  சேவைகளைப்பெற தபால் நிலையங்களுக்கு வந்தோர் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

கிண்ணியா

தம்பலகாமம் ,கல்மெடியாவ,சிராஜ் நகர்,முள்ளிப்பொத்தானை,கிண்ணியா பிரதான தபாலகம் உள்ளிட்ட பல  உப தபாலகங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் முதலானவற்றுக்கு  பணம், செலுத்துவதற்காகவும்  ஏனைய தேவைகளுக்காக  வந்தவர்கள் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது திரும்பிச் சென்றனர்.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் இன்று திங்கட்கிழமை (11) காலை முதல் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பல்வேறு தேவைகள் நிமித்தம் தபாலகங்களுக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணமுடிந்தது. இன்றும், நாளையும் (12) தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் சேவையை பெறவுள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர்.