வெட் வரி திருத்தச் சட்டமூலம் இன்று (11) நிறைவேற்றப்படாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை மற்றும் உலக வங்கி வழங்கும் பணமும் இழக்கப்படும் அபாயம் உள்ளது.
வெட் வரி திருத்தச் சட்டமூலம் நேற்று (10) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவிருந்த போதிலும் கோரம் இன்மை காரணமாக சபை நடவடிக்கைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க ஆகிய அமைச்சர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்து அதற்கான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவித்தனர்.
அதன்படி குறித்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் சபையின் ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் இந்த விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறுகிய காலத்திற்குள் வாய்மொழி கேள்விகளுக்கான பதில்கள் வழங்கலை நிறைவுறுத்த எதிர்பார்ப்பதாக சபை தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று காலை 8.30 மணிக்கு ஆளும் கட்சியின் கூட்டத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபைத் தலைவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வெட் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, வெட் வரி திருத்தச் சட்டமூலத்தை முறையான விவாதம் நடத்தாமல் நிறைவேற்ற அனுமதிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.