முடிவின் ஆரம்பம், தற்போது சரணடைவதுதான்: ஹமாஸ்க்கு நேதன்யாகு எச்சரிக்கை

109 0

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் வடக்குப் பகுதிகளை அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைத்துவிட்டது.

தற்போது தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.இந்த நிலையில், சண்டை முடிவுக்கு வருவதாகவும், ஹமாஸ் அமைப்பினர் இனிமேல் சரணடைவதுதான்… என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நேதன்யாகு கூறுகையில் “சண்டை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கிவிட்டது.

சண்டை முடிகிறது.எஹ்யா சின்வருக்காக உயிர் இழக்காதீர்கள். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். கடந்த சில தினங்களாக பல ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்களது படைகளிடம் சரண் அடைந்துள்ளனர் ” என்றார்.ஹமாஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்ததாக நேதன்யாகு கூறியபோதிலும், அதற்கான ஆதாரத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை.

ஹமாஸ் அமைப்பும் நேதன்யாகு கருத்தை புறக்கணித்துள்ளது.சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக,ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதோடு, எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர்.

இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டில் 1200 பேர் உயிரிழந்தனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.இதனால் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது.

இதுவரை காசாவில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகிறார்கள்.பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.