சென்னை வெள்ள பாதிப்பு பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்தாதது ஏன்?

95 0

ட்ரோன் எனப்படும் சிறிய அளவிலான பறக்கும் இயந்திரம் இந்தியாவில் தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

வேளாண்மை, கட்டுமானம், மருத்துவம், நீர் மேலாண்மை, காவல் என பல்வேறு துறைகளிலும் ட்ரோன்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. புயல், வெள்ளம், நிலச்சரிவு உள் ளிட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ட்ரோன்கள் மிகவும் பயனளிக்கக் கூடியவையாக உள்ளன.

ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க, 2022-ம் ஆண்டு ட்ரோன் வடிவமைப்பு, தயாரிப்புக்கென்று தனிக் கழகத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. கடந்த ஜூன் மாதம் சென்னை காவல் துறையில், ரூ.3.6 கோடி முதலீட்டில் ட்ரோன் கண்காணிப்புக்கென்று தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால், கடந்த டிசம்பர் 4, திங்கள்கிழமை சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பல இடங்களில் மின்சேவை நிறுத்தப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியது. அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் திணறினர்.

வெள்ள நிலைமையை ஆராய வும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்கவும் ட்ரோன் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 8-ம் தேதி வரையில் தமிழ்நாடு அரசு ட்ரோன்சேவையை பயன்படுத்தியாக தெரியவில்லை.