தமிழர் நிலத்தை அபகரிப்பது இன அழிப்பின் ஒரு பகுதியே

105 0

தமிழர் நிலத்தை சுவீகரிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினுடைய ஒரு பகுதியே அராலி முதல் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேசங்கள் ஆக்கிரமிப்பு என சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி பொன்னாலை சந்தியில் நேற்று(10.12.2023) காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சில வருடங்களுக்கு முதல் இலங்கை அரசினுடைய இராணுவமும் கடற்படையும் இணைந்து கரையோரங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் அராலி முதல் பொன்னாலை வரையான இடங்களில் கண்டல் தாவரங்களை நாட்டினர்.

இன்று அரசினுடைய ஒரு ஆக்கிரமிப்பு திணைக்களமாக வடகிழக்கிலே தொழில்பட்டு கொண்டுள்ள வன உயிரியல் திணைக்களம், கண்டல் தாவரங்களை பாதுகாக்க போகின்றோம் என்ற போர்வையில் அராலி முதல் பொன்னாலை வரையான பிரதேசங்களை ஆக்கிரமித்து சுவீகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது அரசினுடைய திட்டமிட்ட சதி முயற்சியாகும்.

தமிழர் நிலத்தை சுவீகரிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினுடைய ஒரு பகுதி இதனை அனுமதித்தால் இலங்கையின் வடக்கிலே இருக்கின்ற 50ஆயிரத்துக்கும் அதிகமான கடற்தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பசியினால் வாட வேண்டும்.

தமிழர் தாயகம் பறிபோகும் சிங்கள குடியேற்றம் வரும். சிங்கள கடற்றொழிலாளர்கள் தமிழகத்திலே வாடிகளை அமைப்பார்கள். எமது கடற்றொழிலாளர்கள் புலம்பெயர நேரிடும்.ஆகவே இதற்கு எதிராக எமது எதிர்ப்பினை பதிவு செய்து கொள்ளுகின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் போராட்டத்தினுடைய எழுச்சி தன்மை முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.