மிஹிந்தலை விகாராதிபதி உயிருக்கு அச்சுறுத்தல்…..! இராணுவத்தை மீளப்பெறுவோம் !

79 0

தனது உயிருக்கு இராணுவத்தினராலும் பாதுகாப்பு தரப்பினராலும் அச்சுறுத்தல் என்று மிஹிந்தலை விகாராதிபதி கருதுவாராயின் இராணுவத்தினர் உட்பட 251 பாதுகாப்பு அதிகாரிகளை மீளப் பெற்றுக்கொள்ளுவோம்.

இராணுவத்தின் மீது படுகொலை குற்றச்சாட்டை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மிஹிந்தலை புனித பூமிக்கு பணிக்கு செல்ல இராணுவத்தினர் விரும்பவில்லை. ஆகவே பாதுகாப்பு தரப்பினரை மீளப்பெறும் தீர்மானத்தில் மாற்றமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

மஹிந்தலை விகாரைக்கும்,அதன் விகாராதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.மிஹிந்தலை புனித பூமியில் 103 கடற்படையின் அதிகாரிகளும்,48 இராணுவத்தினரும், 100 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன்,ஏனைய செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

விகாராதிபதியின் கோரிக்கைக்கு அமைய பல்வேறு செயற்பாடுகளுக்காக பாதுகாப்பு சேவையார்களை மிஹிந்தலை விகாரைக்கு வழங்கியுள்ளோம். கடந்த பொசன் உற்சவத்தின் போது 150 மண் மூட்டைகளை இராணுவத்தினர் தமது தோளில்  சுமந்தவாறு விகாரைக்கு கொண்டு சென்று புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளார்கள்.இவ்வாறான நிலையில் இரண்டு பேர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் உரையாற்றினார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதிக்கு பின்னர் மத தலங்கள்,சுற்றுலா மையங்கள் உட்பட பொது இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சிவில் உடையுடன் இராணுவத்தினர் விகாரைக்கு செல்ல முடியாது என்பதை நேற்று முன்தினமே அறிந்துக் கொண்டேன்.பாதுகாப்புக்காகவே இராணுவத்தினர் சிவில் ஆடையில்  புனித பூமியில் இருந்துள்ளார்கள்.

இராணுவத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்று மஹிந்தலை விகாரையின் விகாராதிபதி கருதுவாராயின்  அங்கு பாதுகாப்பு உட்பட ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடும் 252 பாதுகாப்பு சேவையாளர்களை மீளப்பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம்.இந்த தீர்மானத்தில் மாற்றமில்லை

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இராஜாங்க  அமைச்சரின் தவறான தீர்மானம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.மிஹிந்தலை புனித பூமியை பாதுகாக்க இராணுவத்தினர் உட்பட முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல் இனந்தெரியாத இருவர்கள் புனித பூமியில் இருந்து பொலிஸார் பிடித்துள்ளார்கள்.இவ்வாறான நிலையில் அங்கு பாதுகாப்பில் உள்ள 251 பேரை மீளப் பெறுவதாக குறிப்பிடுவது அநீதியாகும்.பௌத்த மதத்தை  பாதுகாக்க வேண்டியதன் அவசியம் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஆகவே தவறான தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என்பதை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,இந்த இரண்டு அதிகாரிகள் 48 இராணுவத்தினருடன் இரண்டு வாரங்களாக மிஹிந்தலை புனித பூமியில் இருந்துள்ளார்கள்.ஆகவே பாதுகாப்பு தரப்பினர்களுக்கு தெரியாத நபர்கள் என்று குறிப்பிடுவது தவறு.குட்ட குட்ட தலைகுனிபவர் முட்டாள்கள் என்று குறிப்பிடுவார்கள்.இராணுவத்தினருக்கும் சுய கௌரவம் உள்ளது.அவர்களின் சுய கௌரவம் தொடர்பில் நாங்கள் விசேட கவனம்  செலுத்த வேண்டும்.

மிஹிந்தலை புனித பூமியில் சேவையில் உள்ள இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன்,அந்த பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள்.இராணுவத்தினர் படுகொலை செய்ய வந்தார்கள் என்று குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அரசாங்கத்துடன் உள்ள  பிரச்சினைகளை அரசாங்கத்துடன் தீர்த்துக் கொள்ள வேண்டும்.இராணுவத்தினரை  அரசியலுக்கு பயன்படுத்த கூடாது.இவ்வாறான குற்றச்சாட்டுக்களினால் மிஹிந்தலை புனித பூமிக்கு பணிக்கு செல்ல பாதுகாப்பு தரப்பினர் விரும்பவில்லை.ஆகவே 251 பாதுகாப்பு தரப்பினரை மீளப்பெற்றுக் கொள்ளும் தீர்மானத்தில் மாற்றமில்லை என்றார்.