அஸ்வெசும நலன்புரித் திட்டம் ; இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பம் அடுத்த மாதம் கோரப்படும்

79 0

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்யவும், இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை  அடுத்த மாதம் கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதல் கட்டம் தொடர்பில் முழுமையான மீளாய்வு  மேற்கொள்ள  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதலாவது கட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு இரண்டாம் கட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  இரண்டாம் கட்டத்துக்காக அடுத்த மாதம் விண்ணப்பம் கோர எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

14 இலட்சத்து 6932  பயனாளர்களுக்கான ஒக்டோபர் மாத தவணை கொடுப்பனவு வங்கி கணக்குகளுக்கு வைப்பிடும் பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன. கடந்த செப்டெம்பர் தவணை கொடுப்பனவை பெற்றுக்கொண்ட 13 இலட்சத்து 77,000  பயனாளர்களை காட்டிலும்  ஒக்டோபர் மாதம் 29,932 பயனாளர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை 20 இலட்சமாக வரையறை செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நலன்புரி கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 205 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.