மட்டக்களப்பு மயிலத்தமடுவில் இடம்பெறும் அத்துமீறல்கள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும்

74 0

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மேச்சல் தரை பிரச்சினைகள் மிகவும் பிரதானமானதாகும். குறிப்பாக  மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற அத்துமீறல்கள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடகவே பார்க்கப்படுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (09) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கமத்தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செய்கின்ற விவசாயிகள் தமது தொழில் முயற்சியில் பல்வேறு தடைகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டு வருகின்றார்கள்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியம் உரிய வேளைக்கு விவசாயிகளை சென்றடைவதில்லை. உரிய காலத்தில் பயிர்களுக்கு போதியளவு உரம் இடுவதற்கு விவசாயிகள் மிகவும் சிரமங்களையும் பொருளாதார கஷ்டங்களையும் அனுபவிக்கின்றனர். எதிர்வரும் காலங்களில் உர மானியத்தை உரிய வேளையில் விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நவடிக்கை எடுக்க வேண்டும்.

அறுவடை காலத்தில் நெல்லுக்கு ஸ்திரமான விலையின்மை காரணமாக விவசாயிகள் பெரிதும் கஷ்டமும்  கவலையும் அடைகின்றனர். அறுவடை காலத்தில் நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். எமது மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையோ  பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களோ அறுவடை காலத்தில் நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் தனியாருக்கு குறைந்த விலையில் தமது நெல்லை விற்பனை செய்து பாரிய நஷ்டமடைகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுயானைகளின் தொல்லை கட்டுக்கடங்காமல் அதிகரித்து காணப்படுகின்றது. விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை அனுபவிக்கின்றனர். சேனைப் பயிர் நிலங்களும் நெல் வயல்களும்  வயல் வாடிகளும் காட்டு யானைகளினால் சேதப்படுத்தப்படுகின்றது. அடிக்கடி மனித உயிரிழப்புக்ளும் ஏற்படுகின்றன.

விவசாயிகள் மீன்பிடியாளர்கள் கால்நடை பண்ணையாளர்கள் எனப் பலர் இறந்திருக்கின்றனர். இதற்கான தீர்வாக காட்டுயானை அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களுக்கு மின்சார வேலி அமைக்கப்பட வேண்டும். வன ஜீவராசிகள் திணைக்களம் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று கூட ஏறாவூர் பற்று கொம்பர்சேனை விவசாய அமைப்பானது தங்கள் பிரதேசத்திற்கு யானை வேலியை அமைத்துத் தருமாறு என்னிடம் அவசர கோரிக்கை விட்டுள்ளனர்.

எமது பிரதேசத்தில் காணப்படும் அதிகமான விவசாய வீதிகள் மக்கள் பயணிக்க முடியாது பாதிப்படைந்து காணப்படுகின்றன. தங்கள் வயல்நிலங்களுக்குத் தேவையான பொருட்களைää மழை காலங்களில் எடுத்துச் செல்வதற்கும் அறுவடை செய்த நெல்லை தமது வீடுகளுக்கு எடுத்து வருவதற்கும் விவசாயிகள் பெரும் சிரமங்களை அனுபவிக்கின்றனர். குறித்த விவசாய வீதிகள் உடனடியாக புனரமைப்பு செய்யப்படவேண்டும்.

அத்துடன் விவசாயிகளுக்கான காப்புறுதி திட்டமானது கட்டாயமாக்கப்படவேண்டும்.இதன் மூலம் விவசாயிகள் அடையும் நட்டத்தை ஓரளவு ஈடுசெய்யக் கூடியதாக இருக்கும் விவசாயிகளுக்கான கடன் வசதிகளை அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் இலகுவான முறையில் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில்  கால்நடை பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மேச்சல் தரை பிரச்சினைகள் மிகவும் பிரதானமானதாகும். கால்நடைகளுக்கான மேச்சல் தரைகளை வர்த்தமானி மூலம் அடையாளப் படுத்துவதற்கான முயற்சிகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் மாதவணை மயிலத்தமடு பிரதேசத்தில் இடம்பெறுகின்ற அத்துமீறல்கள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. இதனுடைய எதிர்விளைவாக மகோயா பகுதியில் உள்ள கால்நடை பண்ணையாளர்களுடன் இராணுவத்தினர் மிகவும் இறுக்கமாக நடந்துகொள்வது தவிர்க்கப்படவேண்டும். இந்த கால்நடை பண்ணையாளர்களுக்கு எதிரான முரண்பாடுகளை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.