பொலிஸ் சேவை : பதவி உயர்வில் மாத்திரம் பெண் அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது

71 0

பொலிஸ் சேவையில் ஆட்சேர்ப்பு, பயிற்சி, பணியமர்த்துதல் மற்றும் ஓய்வு பெறுதல் என்பன சமமாக இருந்தாலும் பதவி உயர்வில் மாத்திரம் பெண் அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என பெண் அதிகாரிகள் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பதவி உயர்வின் போது பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு பாராளுமன்ற விசேட குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வு வழங்கும்போது பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை, இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் புலப்பட்டது.

இந்தக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (விசேட வைத்தியர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயங்கள் புலப்பட்டன.

தற்போது, மொத்தமாக 26 ஆண்டுகள் சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவியில் 4 ஆண்டுகள் நிறைவடைந்த 92 பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் பணியில் உள்ள நிலையில், அவர்களின் பதவி உயர்வு தொடர்பில் குறிப்பிடப்பட்ட முறையோ, வெற்றிடங்களை இனங்காணுவதோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என இதன்போது புலப்பட்டது.

இந்த அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு முறை, சம்பள அளவுத்திட்டம் என்பன ஆண் அதிகாரிகளின் முறைமை போன்று சமமாக இடம்பெறுவதுடன், பயிற்சியும் எந்த மாற்றமுமின்றி ஒரே பயிற்சிப் பாடசாலையில் ஒன்றாக இடம்பெறுவதுடன், பயிற்சியின் பின்னர் பணியில் அமர்த்துவதும் மாற்றம் இன்றி ஒரே வகையில் மேற்கொள்ளப்படுவதுடன், ஓய்வுபெறும் முறைமையும் ஒரே வகையிலேயே இடம்பெறுகின்றது.

எனினும், ஆண் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கும் போது வெற்றிடம் தொடர்பான சிக்கல் எழுப்பப்படுவதில்லை என்றும், பெண் அதிகாரிகளுக்கு மாத்திரம் இந்த வெற்றிடம் தொடர்பான சிக்கல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எழுப்பப்படுவதாக பரபட்சத்துக்கு உள்ளாகியுள்ள பெண் பொலிஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதற்கான பரிகாரம் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்றும், இதனால் சிரேஷ்டத்துவம் குறைவாக உள்ள ஆண் அதிகாரிகள் பதவி உயர்வு பெரும் அதேவேளை, பெண் அதிகாரிகளுக்கு நீண்ட காலம் ஒரே பதவியில் இருக்க ஏற்பட்டுள்ளதாக இதன்போது புலப்பட்டது.

அத்துடன்,இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு, இலங்கை பொலிஸ் படையணியில் 15 சதவீதத்துக்கும், அதிகமானவர்கள் பெண் அதிகாரிகள் என்பதால், அனைத்துப் பதவிகளிலும்,அந்தந்தப் பதவிகளில் 15 சதவீத  பெண் பிரதிநிதித்துவத்துக்கு வெற்றிடம் ஏற்படுத்துவதற்கு இதன்போது பிரேரிக்கப்பட்டது.

தற்பொழுது காணப்படும் சிக்கலைத் தீர்ப்பதற்கு, ஒரு சந்தர்ப்பத்தில் பதவி உயர்வு முறைமையைத் தயாரித்தல், இந்த முறைமையோ அல்லது வேறு பொருத்தமான முறைமையைத் தயாரித்து அந்தந்தப் பதவிகளுக்கான தகைமைகளை பூர்த்தி செய்துள்ள பெண் அதிகாரிகளை பதவிகளுக்கு நியமிக்கும் முறைமையை தயாரித்தல் மற்றும் குறிப்பிட்ட முறைமையொன்றின் மூலம் குறிப்பிட்ட காலப்பகுதியில் பதவி உயர்வு வழங்குவதற்கு நியாயமான முறையைத் தயாரித்தல் என்பன தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், புதிய வெற்றிடங்களை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் அடங்கிய முன்மொழிவை முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இதன்போது குழுவின் தலைவர், தற்பொழுது பொலிஸ் சேவையில் மொத்தப் படையணியில் 15 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண் அதிகாரிகள் சேவையிலுள்ளதால் தற்பொழுது காணப்படும் வெற்றிடங்களில் 15 சதவீத்தை பெண் அதிகாரிகளுக்கு ஒதுக்கி இந்த சிக்கலைத் தீர்க்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பரிந்துரை வழங்கினார்.