கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 39 வது நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 39 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்
கடந்த மாதம் 20 ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் இன்றைய தினம் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், நாங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கடுமையான அழுத்தங்களை ஜெனீவாவரை நிரூபிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.
விரைவில் காணாமல்போனோர் செயலகம் தொடர்பான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.
ஒவ்வொரு காணமல்போனோர் தொடர்பிலும் விசாரணைகள் இடம்
பெறவேண்டும். இதன்போது நீதி கண்டறியப்பட்டு பின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் அரச தலைவர்கள் ஜெனீவாவில் இணைஅனுசரணை பெற்றுக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்– என்றும் குறிப்பிட்டார்.