கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தார்மீக ரீதியானவை – கிழக்கு முதலமைச்சர்

350 0

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தார்மீக ரீதியானவை எனவும் அவை அவசரமாக தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையில் வளங்களை பகிர்ந்தளிப்பதில் சமனிலைத்தன்மை இல்லாமையினாலேயே கிழக்கு மாகாணத்தில் இன்று வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலையின் மெக்கெய்சர் அரங்கில் ஆரம்பமான யொவுன்புர நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

இன ரீதியான மொழிரீதியான சமநிலைத்தன்மை இலங்கையின் தொழில்வாய்ப்புக்கள் மற்றும் வளப்பங்கீட்டின் போது பேணப்படுவது அத்தியவசியமானது,இதனூடாக இளம் தலைமுறைக்கு மத்தியில் புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்ப முடியும்.

அதுமாத்திரமன்றி பல்லின மொழிகளைப் பேசும் பல்லினக்கலாசாரங்களைப் பேசும் மக்கள் வாழும் நாட்டில் சமமான வளப்பங்கீடு அத்தியவசியமானது என்பதுடன் அதனூடாக மாத்திரமே நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை சாத்தியப்படுத்த முடியும்.

கிழக்கில் உள்ள வெற்றிடங்கள் உரிய வகையில் தீர்ப்பதற்கு நாம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமையின் காரணமாக இன்று நமது மாகாணம் கல்வியில் பின் தங்கிய மாகாணமாக உள்ளதுடன் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கையும் அதிகளவில் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.