அட்டன் கொழும்பு ஏ 07 பிரதான வீதியில் கினிகத்தேன தியகல பகுதியில் பிரதான வீதியில் வீழ்ந்த மரத்தையும் மண்மேட்டையும் அகற்றும் பணியை நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.
கினிகத்தேன பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (07) பிற்பகல் பெய்த கடும் மழையுடன் இரவு 7.45 மணியளவில் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக கொழும்பில் இருந்து அட்டன் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் களுகல, லக்ஷபான, நோட்டன் பிரிட்ஜ் ஊடாக அட்டன் நோக்கியும், கண்டியிலிருந்து அட்டன் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் நாவலப்பிட்டி – தலவாக்கலை வீதியின் ஊடாக செல்வதற்கும் கினிகத்தேன பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த மண்சரிவினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையினால், இன்று வெள்ளிக்கிழமை (08) காலை அட்டன் பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள், அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
பிரதான வீதியில் விழுந்த பெரிய மரம் மற்றும் மண் மேட்டை வெட்டி அகற்றும் பணியை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்துள்ள போதிலும், அதனை சீரமைக்க இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் என்பதால் மாற்று வீதிகளில் வாகனங்களை செலுத்துமாறு கினிகத்தேன பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.