தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை விரைவில் மேற்கொள்வோம்

75 0

கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் ஏற்படுத்தி தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு யாரும் முன்வராவிட்டால் சம்பள நிர்ணய சபையை உடனடியாக கூட்டி, தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (07) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தொழிலட மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் வடிவேல் சுரேஷ் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சம்பள நிர்ணய சபை ஊடாக ஆயிரம் ரூபாவே அதிகரிக்கப்பட்டது.

ஆனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அத்துடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்கு வருமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திக்கிறோம். அதேபோன்று அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.

அவர்கள் இந்த அழைப்பக்கு பதில் வழங்காவிட்டால் மீண்டும் சம்பள நிர்ணய சபையை உடனடியாக கூட்டி, தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி அதுதொடர்பான ஆலோசனைகளை எனக்கு வழங்கி இருக்கிறார்.