சங்கானை சந்தை வியாபாரிகளை பதிய சென்ற பிரதேச சபை உத்தியோகஸ்தர்களுக்கு அச்சுறுத்தல்

56 0

யாழ்ப்பாணம் – சங்கானை மரக்கறி சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளை பதிவு செய்வதற்காக சென்ற வலி. மேற்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர்களை மிரட்டி , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தையில் வியாபார நடவடிக்கைளில் ஈடுபடும் சிலர் , மக்களுடன் முரண்படுவது , அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வது, விவசாயிகளை கொண்டு வரும் மரக்கறிகளை மிக குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதற்காக அவர்களுடன் முரண்படுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் சந்தை வியாபார நடவடிக்கைகளை ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டுவரும் நோக்குடன் , வியாபாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையில் பிரதேச சபையினர் ஈடுபட்டனர்.

வியாபாரிகளின் விபரங்களை பதிவு செய்வதற்காக சந்தைக்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் சென்ற போது, அங்கு வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலரும் , தரகு வேலைகளில் ஈடுபடும் சிலரும் இணைந்து, உத்தியோகஸ்தர்களை  தகாத வார்த்தைகளால் பேசி , அவர்களை தாக்க முற்பட்டு, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர்.

அதனால் பதிவு நடவடிக்கையை கைவிட்ட உத்தியோகஸ்தர்கள் , பிரதேச செயலர் ஊடாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.