சீனி வரி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து விசாரணை

86 0

சீனிவரி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவும் பொலிஸ் திணைக்களமும் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என கோபா குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

கோபா குழுவின் அறிக்கையை வியாழக்கிழமை (7) சபையில் சமர்ப்பித்தபோது எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கணக்காய்வுகளில் பெருமளவு முன்னேற்றம் காணப்படுவதுடன் பெற்றுக் கொள்ளும் நிதி மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் சம்பந்தமாக கணக்காய்வு செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கான ஊக்குவிப்புகளை எம்மால் வழங்க முடியும். குறைபாடுகள் காணப்பட்டபோதும் கணக்காய்வு தொடர்பில் அரசாங்க நிறுவனங்களில் சிறந்த முன்னேற்றம் காணப்படுகிறது. ஊழல் மோசடிகள் முற்றாக இல்லை என்றும் கூற முடியாது.

பாராளுமன்றமும் கணக்காய்வாளர் திணைக்களமும் நிதியமைச்சும் குறிப்பாக பாராளுமன்றத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவும்  எமக்கு தொடர்ச்சியாக வழங்கி வரும் ஒத்துழைப்புக்காக நாம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.

சீனி மோசடி மூலம் 16 பில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அது தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தற்போது மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. அதனால் அறிக்கை சமர்ப்பித்து அனுமதிப்பது மாத்திரமே இடம்பெறுகிறது என்றார்.

அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா தெரிவிப்பதில் உண்மை இருக்கின்றது.  ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து அதற்கான தீர்வு தொடர்பில் ஆராய வேண்டும்.

குழுவின் சில செயற்பாடுகளை முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் இரு தரப்பும் இணைந்து நிலையியற் கட்டளையில்  சில திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெரிவுக் குழுக்களின் மூலம் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றதே தவிர சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது. அந்த வகையில் ஆளும் கட்சியியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து நிலையியற் கட்டளையில்  திருத்தங்களை மேற்கொண்டு இந்த விடயங்களை முறைப்படுத்துவது அவசியமாகும்.

சீனிவரி மோசடி தொடர்பில் கணக்காய்வு குழு மூலம் பொலிஸ் திணைக்களத்திற்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மீண்டும் மீண்டும்  அது தொடர்பில் தொடர்ச்சியாக ஞாபகப்படுத்தப்பட்டுள்ளன. விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனங்கள் எமக்கு தெரிவித்துள்ளன என்றார்.