ஒருமித்த நாட்டுக்குள் அனைவருக்கும் சமவுரிமை

78 0

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கமாக செயற்படுகிறோம்.நாட்டின் சுயாதீனத்தன்மையை விட்டுக் கொடுத்து செயற்படவில்லை.

அதேபோல் பிற நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய நாட்டை நிர்வகிக்க போவதில்லை. தமிழ்,சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கௌரவமான முறையில் வாழும் சூழல் காணப்படுகிறது.

தமிழர்களுக்கு அவர்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். எம்மால் இரு முனைகளில் இருந்துக் கொண்டு செயற்பட முடியாது.

தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படும் நிலையில் பிரிவினைவாதம் தோற்றம் பெறுவதையும் தடுக்க வேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பிளவுப்படாத வெளிவிவகார கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம். சீனா, இந்தியா, அமெரிக்கா,மேற்குலக நாடுகள் உட்பட சகல நாடுளுடனும் இணக்கமாக செயற்படுகிறோம்.எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்துக்கு இலங்கையின் பிரதான நிலை நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.பிளவுபடாத வெளிவிவகார கொள்கையினால் தான் இந்த முன்னேற்றத்தை எம்மால் அடைய முடிந்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா,இந்தியா  உட்பட பெரிஸ் கிளப் நாடுகள் ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் சாத்தியம் காணப்படுகிறது.

வெளிவிவகாரத்துறை அமைச்சு,வெளிநாட்டலுவல்கள் அமைச்சு,சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் இணக்கமாக செயற்படுகிறது. வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் 1.5 பில்லியன் ரூபா  முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொருளாதார மீட்சிக்காக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் வெற்றிப்பெற்றுள்ளன.கனடா மாத்திரம் இலங்கையின் விவகாரத்தில்  எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ளது.

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்துக்கு வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு அரச தலைவர்களை நேரில் சந்தித்து தமது கொள்கை திட்டங்களை தெரிவித்துள்ளார்.அதன் பயனாகவே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிப்பெற்றது.வெளிவிவகாரத்துறை யின் சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கமாக செயற்படுகிறோம். நாட்டின் சுயாதீனத்தன்மையை விட்டுக் கொடுத்து செயற்படவில்லை. அதேபோல் பிற நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய நாட்டை நிர்வகிக்க போவதில்லை.தமிழ்,சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கௌரவமான முறையில் வாழும் சூழல் காணப்படுகிறது.

தமிழர்களுக்கு  அவர்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். எம்மால் இரு முனைகளில் இருந்துக் கொண்டு செயற்பட முடியாது.தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படும் நிலையில்  மறுபுறம் பிரிவினைவாதம் தோற்றம் பெறுவதையும் தடுக்க வேண்டும்.ஒருமித்த நாட்டுக்குள் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்படும்.

2020 ஆண்டு நான் நீதியமைச்சராக பதவியேற்ற போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 400 பேர் இருந்தார்கள். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் சில்வாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சட்டத்தின் ஊடாக 200 பேரை விடுதலை செய்தோம்.

அதேபோல் பயங்கரவாதத்துடன் நேரடியாக தொடர்பில்லாத சம்பவங்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்ய வேண்டாம் என்ற சுற்றறிக்கையை 2020.09.21 ஆம் திகதி வெளியிட்டோம்.பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.