தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் ஓடாது

273 0

இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டதால் ரூ.10 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்து உள்ளன.

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியது. 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது.

இந்தநிலையில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியது. இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் வாபஸ் பெறக்கோரி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று (வியாழக்கிழமை) முதல் லாரிகள் ஓடாது என அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 6 தென் மாநிலங்களைச் சேர்ந்த 30 லட்சம் லாரிகள் இயக்கப்படுவது நிறுத்தப்படுகிறது.

லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கிற்கு ஆதரவாக, லாரிகளில் சரக்கு புக்கிங் செய்வதும் நேற்றுமுன்தினம் முதல் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ராஜவடிவேல் கூறியதாவது:-

லாரிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘சரக்கு புக்கிங்’ நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 5,643 லாரி புக்கிங் ஏஜெண்டு நிறுவனங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

‘சரக்கு புக்கிங்’ நிறுத்தப்பட்டதால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதன் மூலம் லாரி டிரைவர்கள், கிளனர்கள், சுமை தூக்குபவர்கள் என ஏராளமான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.