அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் அதிகமான மாகாண வைத்தியசாலைகளுக்கு போதுமான வசதிகள் இல்லாமையால் அங்கு முறையான வைத்தியம் இடம்பெறுவதில்லை.
அதனால் மத்திய அரசாங்கத்தினால் அந்த வைத்தியசாலைகளுக்கு போதுமான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அம்பாறை மவட்டத்தில் பாெத்துவில், கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய தொகுதிகளில் சுமார் 5இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் மத்திய அரசாங்கத்துக்கு கீழ் 3 வைத்தியசாலைகளும் கல்முனை ஆர்.டி,எச்.எஸ். க்கு கீழ் 26 வைத்தியசாலைகளும் 4 ஆதார வைத்தியசாலைகளும் இருக்கின்றன.
இந்த வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு, வைத்தியர் தட்டுப்பாடு, உபகரண தடுப்பாடு இருந்து வருகிறது. இந்த தேவைப்பாடுகளை பெற்றுக்கொள்வது பெரும் சவாலுக்குரியதாகவே இருந்து வருகிறது. அதனால் இத்தனை வைத்தியசாலைகள் இருந்தும் அங்கு முறையான வைத்தியம் இடம்பெறுகிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இருந்தபாேதும் நான் சுகாதாரா இராஜாங்க அமைச்சராக இருந்தபோதும் சீன அரசாங்கத்தின் உதவியுடன் 13 வைத்தியசாலைகளை அமைத்தோம். அதில் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் பிரதேசத்தில் இரண்டு வைத்தியசாலைகளை அமைத்தோம். இந்த இரண்டு வைத்தியசாலைகளிலும் சுமார் 80வீத பணிகள் முடிவடைந்துள்ளன.
ஆனால் 4வருடங்களாகியும் இந்த வைத்தியசாலைகளின் பணிகள் பூர்த்தி செய்யாததால் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன. அதனால் இந்த வைத்தியசாலைகளின் பணிகளை பூர்த்தி செய்து விரைவாக இதனை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் மாகாண வைத்தியசாலைகளுக்கு போதுமான நிதி வழங்கப்படாமல் இருப்பதால் அதிகமான வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ராஜதித்த சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருக்கும்போது இது தொடர்பாக கவனம் செலுத்தி மத்திய அரசாங்கத்தின் நிதியில் இருந்து மாகாண வைத்தியசாலைகளுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுத்து வந்தார். ஆனால் தற்போது இந்த நடவடிக்கை இடம்பெறுவதி்ல்லை. அதனால் இந்த நடவடிக்கையை மீள ஆரம்பித்து மாகாண வைத்தியசாலைகளை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.