இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் இராஜாங்க அமைச்சரல்ல, அவர் முழு இலங்கைக்கும் பொதுவான இராஜாங்க அமைச்சர் ஆகவே கிராமிய வீதிகள் அபிவிருத்தியில் வடக்கு மாகாணம் குறித்தும் அவர் அவதானம் செலுத்த வேண்டும் என்பதை தயவுடன் வலியுறுத்துகிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகிய அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்யுமாறு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அவர் விசேட கவனம் செலுத்தியுள்ளமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தூர் – சங்கானை வீதி உட்பட மூன்று பிரதான வீதிகளை புனரமைத்து தருமாறு கடந்த ஆகஸ்ட் மாதமளவில் அவரிடம் வலியுறுத்தினேன்.தற்போது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நிதி நெருக்கடி காரணமாக அபிவிருத்தி பணிகளில் சற்று தாமதம் காணப்படுகிறது.
யாழ்ப்பாணம் முதல் வவுனியா வரை காலை வேளையில் ‘யாழ் ராணி ‘ என்ற அலுவலக புகையிரதம் சேவையில் ஈடுப்படுகிறது.இதனால் உத்தியோகஸ்தர்கள்,பாடசாலை மாணவர்கள் உட்பட பெரும்பாலானோர் பயனடைகிறார்கள்.
அதே போல் வவுனியா முதல் காங்கேசன்துறை வரை அலுவலக புகையிரத சேவையை ஆரம்பித்தால் பொது மக்களுக்கு அது பயனுடையதாக அமையும்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு சேவையில் ஈடுபடும் உத்தரதேவி புகையிரதத்தில் இரண்டாம் வகுப்பு போதுமான அளவு இல்லாத காரணத்தால் பொது பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள்.
இரண்டாம் வகுப்புக்கான பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டு மூன்றாம் வகுப்பில் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மேலதிகமாக 300 முதல் 400 ரூபாய்களை இழக்கிறார்கள்.
புகையிரத சேவையை பயன்படுத்தும் பயணிகள் தமது சொந்த வாகனங்களை புகையிரத நிலையங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்க முடியாத நிலை காணப்படுகிறது.நாட்டில் உள்ள சகல புகையிரத நிலையங்களிலும் இந்த பிரச்சினை காணப்படுகிறது.புகையிரத சேவையை பயன்படுத்தும் பயணிகள் தமது சொந்த வாகனங்களை புகையிரத நிலையங்களை அண்மித்த பகுதியில் நிறுத்தி வைப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புகையிரத சேவைகளில் பிரத்தியேக ‘உறங்கல் இருக்கை’ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.அத்துடன் தலைமன்னாருக்கான புகையிரத சேவையின் நேர அட்டவணை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தம் செய்ய வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரும் வகையில் 2022 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இதனால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண பணிப்பாளருடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.சங்கானை,சுன்னாகம் ஆகிய பகுதிகளை நகர அபிவிருத்தி அதிகார சபைக்குள் உள்ளடக்கலாம்,ஏனைய பகுதிகளை பிரதேச சபையின் கீழ் உள்ளடக்குவது பொறுத்தமானதாக இருக்கும்.
இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் இராஜாங்க அமைச்சரல்ல,அவர் முழு இலங்கைக்கும் பொதுவான இராஜாங்க அமைச்சர்,ஆகவே கிராமிய வீதிகள் அபிவிருத்தியில் வடக்கு மாகாணம் குறித்தும் அவர் அவதானம் செலுத்த வேண்டும் என்பதை அவரிடம் தயவுடன் வலியுறுத்துகிறேன் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய போக்குவரத்து,ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன வடக்கு மாகாணத்துக்கான புகையிரத சேவையை அபிவிருத்தி செய்ய உரிய நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் டி.சித்தார்த்தன் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவோம் என்றார்.