மத்தள விமான நிலையத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விமானங்களை புதுப்பிப்பதற்காக 7 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். தனியார் துறை முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என துறைமுக அபிவிருத்தி மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (29) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் லலித் எல்லாவல எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எவ்வாவல எம்.பி, தமது கேள்வியின்போது மத்தல விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான செலவு, அதனால் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் வினவி இருந்தார். அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
மத்தள மஹிந்த ராஜபக்ஷ் சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 247.7மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிதியே அதற்கு செலவிடப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு நன்கொடைகள் அந்த நிர்மாணப் பணிகளுக்காக கிடைக்கவில்லை. எனினும் சீனாவின் எக்ஸிம் வங்கி 100 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை சலுகைக் கடனாக வழங்கியுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ஸ்ரீலங்கா பிரைவேட் லிமிடெட் 57.7 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை வழங்கியுள்ளதுடன் இதில் 4மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
2017 முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் இரண்டு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 2017,2018,2019,2020 ஆம் ஆண்டுகளில் இரண்டு பில்லியன் நட்டம் ஏற்பட்டாலும் 2021 ஆம் ஆண்டு சற்று முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எனினும் இந்த வருடத்தில் அந்த நட்டம் 1.1 பில்லியனாக குறைவடைந்துள்ளது.
மேற்படி விமான நிலையம் ஸ்தாபித்தமை தொடர்பில் நாடு நட்டமடைந்துள்ளமை ஏற்றுக் கொள்ளக் கூடியது. அந்த வகையில் இந்த விமான நிலையத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகின்றோம். அத்தகைய நிலையிலேயே இரண்டு பில்லியனாக இருந்த நட்டம் தற்போது 1.2 பில்லியனாக குறைவடைந்துள்ளது.
தற்போது சில விமானங்கள் அந்த விமான நிலையத்திற்கு வருகை தருகின்றன. அந்த விமான நிலையத்தை முன்னேற்றும் வகையில் தனியார் துறையினருக்கும் முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப குழு ஒன்றின் மூலம் அது தொடர்பில் கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான முடிவுகளை இன்னும் இரண்டு வாரங்களில் வெளிப்படுத்த முடியும். விமானங்களை புதுப்பிப்பதற்காக 7 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலைகளின் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முடியாத விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கே அனுப்பப்படுகின்றன.
இல்லாவிட்டால் நாம் மதுரை விமான நிலையத்திற்கே அதனை அனுப்ப நேரிடும். எப்போதுமே ஒரு நாட்டுக்கு வரும் விமானம் அங்குள்ள மாற்றீடான விமான நிலையங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுண்டு. அதனால் மத்தள விமான நிலையத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் நாட்டுக்கு கிடைக்கின்றன.
அந்த வகையில் தனியார் துறை முதலீட்டாளர்களின் பங்கேற்புடன் அந்த விமான நிலையத்தை இலாபமீட்டும் விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.