சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023.

743 0

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 திங்களன்று பாசல் மாநிலத்தின் Messe அரங்கில் மிகுந்த உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
11.00 – 12.30 மணிவரை மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தில் தனித்தன்மையோடு ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு மாண்புடன் நடைபெற்றது. அதனையடுத்து 12.45 மணிக்கு தமிழீழத்தின் பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து சேகரிக்கப்பெற்ற புனித மண்ணையும் கல்லறைக் கற்களையும் சீருடையின் சாட்சியாக எம்மிடம் சேகர்க்கப்பெற்ற பகுதியையும் மாவீரர்களின் பிள்ளைகள் அரங்கிற்கு ஏந்திவருதலுடன் மாவீரர் நாள் 2023 உணர்வெழுச்சியுடன் தொடங்கப்பெற்றது.

சுவிஸ் நாட்டின் செய்தி ஊடகங்களின் கருத்துப்படி 5000 இற்கு மேற்பட்ட மக்களுடன் எழுச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர் தியாகங்களை வெளிக்காட்டும் வகையிலான இளையோர்களின் கலைநிகழ்வுகளும் மாவீரர் நினைவாக நடாத்தப்பெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன. கடந்த 22 ஆண்டுகளாக Forum மண்டபத்தில் நடைபெற்ற மாவீரர் நாள், இவ்வாண்டு சுவிசின் அயல்நாடுகளான யேர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளை இணைக்கும் பாசல் நகரின் Messe மண்டபத்தில் நடைபெற்றதால் அங்கிருந்தும் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். ஆயிரமாயிரமாய் அணிதிரண்ட எம் மக்களின் எழுச்சியும் மாவீரர் நாளின் மகத்துவமும் சுவிஸ் நாட்டவர்களால் வியந்து நோக்கப்பட்டது.

மிகப் பிரமாண்ட அரங்கில் 1700 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் திருமுகங்கள் ஏற்றப்பட்ட சுடர்களிலே ஒளிவீச, முதன்மை கோபுரமும் தடையகற்றிகளின் கோபுரமும் நடுகல்நாயகர்களின் கோபுரமும் கரும்புலிகளின் 6 கோபுரங்களும் நிமிர்ந்து நிற்க, நாட்டுப்பற்றாளர், மாமனிதர்கள் திருவுருவப்படங்கள் உணர்வோடு சங்கமிக்க, முள்ளிவாய்க்கால் நினைவு மக்கள் தூபி தமிழின அழிப்பின் சாட்சியாய் நிற்க, தமிழீழத் தேசியச் சின்னங்கள் அரங்கு முழுவதையும் எழுச்சியூட்ட, தமிழீழத்தேசியக்கொடி பட்டொளி வீச, மாவீரர் குடும்ப உறவுகளின் உணர்வலைகள் மாவீரம் சொல்ல குழந்தைகள், சிறுவர், இளையோர், உணர்வாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்களென எல்லோரும் மாவீரர் நினைவுகளோடு உறைந்திருந்து உறுதி எடுத்துக்கொண்ட காட்சி மாபெரும் வரலாற்றுப் பதிவாகும்.

எத்தடைவரினும் அத்தடை உடைத்து தமிழீழத் தேசியத் தலைவரது வழிகாட்டலை ஏற்ற மக்களாக தமிழீழத் தாய்நாட்டை மீட்போம் என்ற உறுதியுடன் 2023 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிறைவெய்தியது.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்,