தாயக மண்மீட்புப் போரில் காவியமாகி மீளாத்துயில் கொள்ளும் எமது மானமாவீரர்களை 27.11.2023 ஆம் நாள் திங்கட்கிழமையன்று. பெல்சியத்தில் அன்ற்வெப்பன் மாநிலத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவுக்கல்லறையில் விளக்கேற்றி வணக்கம் செலுத்தியோடு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் மிகவும் எழுச்சியுடன் பெருந்திரளான மக்கள் ஒன்று சேர்ந்து மாவீரர் நினைவு நாளானது பகல் 12.30 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியது.
பெதுச்சுடரினை வீரவேங்கை சந்திராவின் சகோதரன் செல்வராசா செல்வதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பெல்சியக் கிளையின் பொறுப்பாளர் திரு . மார்க்கண்டு இரங்கநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு தேசியத்தலைவர் அவரகளின் மாவீரர் நாள் உரை ஒளிபரப்பப்பட்டது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துலகத் தொடர்பகத்தின் 2023 ஆம் ஆண்டு கொள்கை பகுப்பாய்வு அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை லெப்டினன்ற் ஈழவருதியின் தாயார் திருமதி சந்திரவதனா ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய உறவினர்கள் நண்பர்கள் மாவீரர் திருவுருவப் படங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி உளமுருக வணக்கம் செலுத்தினர். சமநேரத்தில் மாவீரர் நினைவுப் பாடல் ஒலிக்க விடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ்க்கலை அறிக்கூட மாணவர்களின் வில்லுப்பாட்டும் எழுச்சி நடனங்கள் , பாடல்கள் , மற்றும் கவிதைகள் இடம்பெற்றன. அத்துடன் மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு இடம்பெற்றது. அனைத்துலக தொடர்பகம் சார்பாக யேர்மனியிலிருந்து வருகை தந்த திரு மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்று இறுதியாக தேசியக்கொடி கையேந்தல் செய்யப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் …..”என்ற எழுச்சிப்பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.