“வீட்டுக்கு அண்ணாவை அழைத்து வந்தபோது, அண்ணா குடிக்க தண்ணீர் கேட்டார். செம்பில் தண்ணீர் கொடுத்த போது, அதனை அவரை குடிக்கவிடாமல், பொலிஸார் செம்பை பறித்து தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டார்கள்” என வட்டுக்கோட்டையில் உயிரிழந்த இளைஞனின் சகோதரன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 26) எனும் இளைஞனின் சகோதரன் மேலும் கூறுகையில்,
கடந்த 08ஆம் திகதி மாலை 4 மணியளவில் மர கடத்தல் வழக்கு ஒன்று தொடர்பிலான விசாரணைக்கு என அண்ணாவை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்றனர். அதன்போது, தாம் இளவாலை பொலிஸார் என்றே எமக்கு கூறியிருந்தனர்.
நான் இளவாலை பொலிஸ் நிலையம் சென்றபோது, தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என மறுத்துவிட்டனர். பிறகு நான் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்று விசாரித்தபோதும் தாமும் யாரையும் கைது செய்யவில்லை என்றும் இங்கே யாரையும் கூட்டி வரவில்லை என்றும் கூறினார்கள்.
ஆனாலும் நான் வீடு திரும்பாமல் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாகவே காத்திருந்தேன். இரவு 7 மணி போல இங்கே தான் அண்ணா இருக்கிறார் என்றார்கள். அதனால் தொடர்ந்து பொலிஸ் நிலையம் முன்பாக காத்திருந்தேன். இரவு 10 மணி போல அண்ணாவின் அவலக் குரல் கேட்டது. அண்ணாவிற்கு அடிக்கிறார்கள் என தெரிந்து உள்ளே போய் கேட்டேன்.
களவு வழக்கொன்றில் சந்தேகத்தில் கைது செய்திருக்கிறோம். விசாரணை முடிய நாளை விடிய விடுவிப்போம் என கூறினார்கள். எங்களை வீட்ட போக சொல்ல நாம் வீட்ட வந்துவிட்டோம்.
இரவு 11 மணி போல அண்ணாவை பொலிஸார் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போதே அண்ணாவிற்கு கை ஏலாது. நடக்கவும் சிரமப்பட்டார். “குடிக்க தண்ணி தா” என கேட்டார். நான் செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தபோது, பொலிஸார் அதனை பறித்து நிலத்தில் ஊற்றிவிட்டார்கள். தண்ணீர் கொடுக்க வேண்டாம் என எம்மை மிரட்டினார்கள்.
பின்னர் சுமார் ஒரு மணிநேரம் எமது வீட்டை சோதனையிட்டனர். பின் மீண்டும் அண்ணாவை அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்றுவிட்டனர்.
மறுநாள் 09ஆம் திகதி நாம் பொலிஸ் நிலையம் சென்று கேட்டபோது, உரிய முறையில் பதில் சொல்லவில்லை. நாம் பொலிஸ் நிலையம் முன்பாக காத்திருந்தபோது, நீண்ட நேரத்தின் பின்னர் எம்மை பொலிஸ் நிலையத்துக்குள் அழைத்து, அவரை விசாரணைக்காக வெளியே அழைத்து சென்றுள்ளார்கள். நீங்கள் போட்டு பிறகு வாங்க என எம்மை அனுப்பி வைத்தார்கள்.
அதற்கு அடுத்த நாள் 10ஆம் திகதி போன போதும் அண்ணாவை விடவில்லை. அதனால் நாம் 10ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தோம்.
பிறகு 11ஆம் திகதி இரவு 07 மணி போல அண்ணாவை விடுகிறோம் என சொன்னார்கள். அப்ப நான் மாலை 4 மணியளவில் பொலிஸ் நிலையம் சென்றேன். அப்போது குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என்னை அழைத்து ஏன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டாய் என மிரட்டும் தொனியில் விசாரணை செய்தார். அண்ணாவை இனி விடுவிக்க முடியாது எனவும் கூறினார்.
பின்னர் என்னை வெளியே அனுப்பி விட்டு, சிறிது நேரம் கழித்து என்னை மீள உள்ளே அழைத்து, அண்ணாவோடு போன் ஒன்றை தந்து அண்ணா அழைப்பில் உள்ளார் கதை என்றார். போனில் கதைத்த போது, “எப்ப என்னை விடுவார்கள் என கேள்” என அண்ணா சொன்னபோது போன் கட் ஆகிட்டு. அவர்கள் போனை பறித்தார்களா? அல்லது தானாக கட் ஆகிட்டா என தெரியவில்லை.
பிறகும் நாம் தொடர்ந்தும் காத்திருந்தபோது, இரவு 08 மணியளவில் அண்ணாவை கூட்டி வந்து காட்டினார்கள். அப்போது அண்ணாவின் கைகளில் காயங்களும், வீக்கங்களும் இருந்தன.
கையில் என்ன காயம் என கேட்டபோது , பின்னுக்கு கையை இழுத்து விலங்கு போட்டு இழுத்ததால் ஏற்பட்ட காயம் என சொன்னார்.
அதற்கு பிறகு 12ஆம் திகதி விடிய 11 மணி போல நீதிமன்றுக்கு அழைத்து செல்வோம் அப்ப வாங்க என எம்மை அனுப்பி வைத்தனர்.
நாம் மறுநாள் 12ஆம் திகதி காலை 10 மணிக்கே பொலிஸ் நிலையம் சென்றுவிட்டோம். காலை 11 மணிக்கு பிறகு அண்ணாவையும் மற்றயவரையும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றி நீதிமன்றுக்கு அழைத்து செல்வதாக சென்றனர்.
நாம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்தோம். வட்டுக்கோட்டையில் இருந்து சங்கானை வந்து, அங்கிருந்து சித்தங்கேணி வந்து, சித்தங்கேணியால் மல்லாகம் போய், மல்லாகத்தால் சுன்னாகம், மருதனார் மடம் எல்லாம் போய் மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் வைத்தியசாலைக்கு சென்று கொண்டனர்.
வைத்தியசாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் வைத்திருந்த பின்னர் மீண்டும் அங்கிருந்து மருதனார் மடத்தில் உள்ள மல்லாகம் நீதவானின் இல்லத்திற்கு அழைத்து சென்றனர்.
நீதவான் இல்லத்திற்கு அருகில் எம்மை விடவில்லை. அண்ணாவின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகி இருந்தவர். நீதவான் இருவரையும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சட்டத்தரணியின் விண்ணப்பத்தை அடுத்து , நீதவான் அண்ணாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு கட்டளையிட்டார்.
அதை அடுத்து 12ஆம் திகதி மாலை 06 மணியளவில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அண்ணாவை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளோம். அவரால் ஏலாது. நீங்கள் யாராவது அவருக்கு உதவியாக வந்து நில்லுங்கள் என கூறினார்.
அதனை அடுத்து , நான் வைத்தியசாலை சென்று அண்ணாவிற்கு உதவியாக நின்றேன் என்றார்.
அதேவேளை உயிரிழந்த இளைஞனின் பெரியம்மா தெரிவிக்கையில்,
வைத்தியசாலையில் இருந்தவனுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்த போது , அவன் பெரியம்மா சாப்பிட விருப்பமா தான் இருக்குது. சாப்பிட்டா சத்தி வருகுது என்றான். றோல் ஒன்றை கொடுத்தேன் அதனை சாப்பிட்டு சத்தி எடுத்தான் . பிறகு கொண்டு போன ஆப்பிளில் இரண்டு துண்டை வெட்டி கொடுத்தான். அதை சாப்பிட்டான். நான் பார்க்கும் போது அவன் ஏலாது தான் இருந்தான். எப்படியாவது குணமாகி வந்துடுவான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவன் மீள வர முடியாத தூரத்திற்கு போய்விட்டார் என கண்ணீர் விட்டழுதபடி தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில்,
வைத்தியசாலையில் 28ஆம் இலக்க விடுதியில் தான் மகனை அனுமதித்து இருந்தார்கள். அவனை பார்த்தேன். கை கால்களை கூட அசைக்க முடியாத அளவுக்கு சுகவீனமாக இருந்தான். எழும்பி இருக்க கூட முடியாத அளவில் இருந்தான். நான் இரண்டு நாளாக அவனை தூக்கி இருத்தி பார்த்தேன்.
பின்னர் புதன்கிழமை அவன் குணமடைந்துவிட்டான் என கூறி சிறைச்சாலைக்கு அழைத்து சென்று விட்டார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மகன் உயிரிழந்த விடயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு வரும் போதே உயிரிழந்தார் என சொன்னார்கள். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவன் சிறைச்சாலையிலேயே உயிரிழந்துவிட்டான் என கூறினார்.