எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்ற முடியும்!

141 0

ஜனாதிபதி எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து சபையில் உரையாற்ற முடியும் என்பது தெளிவாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை யாருக்கும் தடுக்க முடியாது என  பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (24) ஜனாதிபதி ஆற்றிய உரையையடுத்து ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கிடையில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றுவதற்கு உள்ள அதே உரிமை ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பிற்கு இணங்க காணப்படுகிறது.

அதே வேளை அரசியலமைப்பின் 32வது அத்தியாயத்தின் படி எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தர முடியும் . என்றும்  அந்த வகையில் பாராளுமன்ற அமர்வுகள், விசேட ஆரம்ப நிகழ்வுகள் அதனை பின்பற்றும் நிகழ்வுகளுக்கும் அவர் வருகை தரமுடியும்.

பாராளுமன்றத்துக்கு  நேற்று வருகை தந்த ஜனாதிபதி, நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சுமந்திரன் சபையில் தெரிவித்த உண்மைக்குப் புறம்பான கூற்று தொடர்பில் தெளிவுபடுத்தல் ஒன்றையே வழங்கினார்.

ஜனாதிபதி உரையாற்றுகையில் அனைவரும் அமைதியாக அதனைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஏனெனில் அரசியலமைப்பிற்கு இணங்கவே அவர் அந்த தெளிவூட்டலை வழங்கினார்.

எனினும்  ஜனாதிபதிக்கு அவ்வாறு உரையாற்ற முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஜனாதிபதியின் உரையை தடுப்பதற்கு எந்த உரிமையும் அவர்களுக்குக் கிடையாது என்றார்.