புத்தளம் பிரதேச வர்த்தகர் ஒருவர் நேற்று (22) வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் பணம் வட்டிக்கு கொடுத்தல் மற்றும் பல்வேறு வியாபாரங்களை நடத்தி செல்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது மனைவி 7 மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு சென்றதாகவும் இந்நிலையில் மூன்று பிள்ளைகளையும் இவர் பராமரித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது பிள்ளைகளை தினமும் பாடசாலைக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தந்தை பாடசாலை முடிவடையும் நேரம் பிள்ளைகளை அழைத்து செல்ல வராததால் பிள்ளைகள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
வீடு திறந்திருப்பதை அவதானித்த பிள்ளைகள் தந்தையை வீடு முழுவதும் தேடி வந்த நிலையில் தந்தை மேல் மாடியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்ததாக மூத்த மகன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.