வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்கி, வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பு பேரவையின் ஒருசில உறுப்பினர்களின் செயற்பாடுகளினால் நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது. ஆகவே பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்படும் என்றும் கூறினார்.
அத்துடன் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்றுத்துறையின் பகுதி இல்லை என்று சுமந்திரன் குறிப்பிடுவதை ஏற்க முடியாது. நிறைவேற்றுத்துறையின் ஒரு அங்கமாகவே பேரவை உருவாக்கப்பட்டது. ஆகவே, அரசியலமைப்பு பேரவை நிறைவேற்றுத்துறையின் அங்கமாகவே செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின் பேரவையின் உறுப்பினராக சித்தார்த்தனை நியமிக்கும் பரிந்துரை தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு ஒருமித்த தீர்மானத்தை எடுத்தால் என்னால் ஒரு கட்டளையை பிறப்பிக்க முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு பேரவையில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிற்கு முன்னுரிமை வழங்க முடியாது என்று தெரிவித்தார்.