யுவதியை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியவருக்கு 20 வருடங்களின் பின் 45 வருட கடூழியச்சிறை

55 0

சுகயீனமுற்ற தனது  தந்தையை கவனித்துக்கொள்வதற்காக பாடசாலை கல்வியை இடை நடுவில் நிறுத்திவிட்டு வீட்டுப் பணிப்பெண்ணாக கடமை புரிந்துக்கொண்டிருந்த 17 வயதுடைய யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றி கொண்டிருந்த 17 வயதுடைய யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு மேல் நீதிமன்றம்  45 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி இவ்வாறு தீர்பளித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு விசாரணைக்கு சுமார் 20 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு விசாரணைகளை புறக்கணித்து வந்த சந்தேகநபரை  கைது செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2003 ஆண்டு 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக சேர்ந்துள்ளார். குறித்த யுவதியின் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை சுகயீனமடைந்து உள்ளார்.

இந்நிலையில் அவரை கவனித்துக் கொள்வதற்காகவும் கடுமையான  வறுமை நிலை காரணமாகவும்  பாடசாலை கல்வியை இடை நடுவில் நிறுத்தி விட்டு  குறித்த யுவதி வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார்.

இருப்பினும் வீட்டில் இருந்த நபர் ஒருவரால் யுவதி ஒன்றரை மாதங்களுக்குள் மூன்று முறை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த விடயம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அதற்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில்  நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே  இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.