மாணவர்களை லன்ச் ஷீட் உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்

125 0

பாடசாலை மாணவர்களை உணவுகளை சுற்றும் தாள்களை (lunch sheet)உண்ணுமாறு கட்டாயப்படுத்திய ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவுத் தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை பலவந்தமாக உண்ண வைத்த செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று கல்வி அமைச்சர், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரை அழைத்து தகவல் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையின் 11ம் தர மாணவர்கள் குழுவொன்று மதிய உணவை லன்ச் ஷீட்டில் சுற்றி கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்பாடசாலை பொலித்தீன் அற்ற வலயமாகப் பராமரிக்கப்படுவதால், குறித்த மதிய உணவுத் தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை சாப்பிடுமாறு சம்பந்தப்பட்ட மாணவர்களை அதிபர் வற்புறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான சம்பவத்திற்கு முகங்கொடுத்த இரண்டு பாடசாலை மாணவர்கள் நேற்று காலை நாவலப்பிட்டி வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த ஏனைய ஐந்து மாணவர்களும் இன்று (23) பாடசாலைக்கு வந்துள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர், இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, பஸ்பாகே வலய கல்விப் பணிப்பாளர் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விசாரணையின் வசதிக்காக சம்பந்தப்பட்ட அதிபரை இடமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.