வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் சுமார் நான்கு மணிநேர பாதுகாப்பினை வட்டுக்கோட்டை பொலிஸார் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில்,
நான் மதியம் எனது தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கசிப்பு வாடை அடித்தது. இதன்போது நானும் என்னுடன் வேலை செய்தவரும் கசிப்பு காய்ச்சும் வாடை அடிப்பதாக பேசிக்கொண்டிருந்தோம்.
இதன்போது கசிப்பு காய்ச்சிய வீட்டுக்காரன் வேலி பக்கத்தில் இருந்து சத்தகம் கட்டிய கொக்கத்தடி மூலம் எனது கழுத்தை அறுக்க முயன்றார். நான் திடீரென்று சத்தகத்தை பிடித்தவேளை அது எனது கையை வெட்டியது. உடனே நான் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துவிட்டு வந்தேன்.
பின்னர் இரவு நான் எனது வீட்டில் இருக்கும்போது கண்ணாடி போத்தில்களால் எனது வீடு மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தப்பட்டது. வீட்டின் கதவு வாளாலும் கத்தியாலும் வெட்டி சேதமாக்கப்பட்டது.
எனது மகளின் வீடும் எனது வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ளது. இதன்போது நான் எழுப்பிய சத்தத்தை கேட்ட எனது மகள் சம்பவ இடத்திற்கு வந்தவேளை எனது மகள் மீது கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டது. அந்த ஆயுதம் சரிவாக எனது மகளின் கையில் விழுந்ததால், வெட்டு காயம் இல்லாமல் மகளின் கையில் பாரிய கண்டல் காயம் ஏற்பட்டது.