சட்டவிரோத குடியேற்றத்தில் 3-வது இடத்தில் இந்தியர்கள்: அமெரிக்க பிஇடபிள்யூ மையம் தகவல்

72 0

 அமெரிக்காவில் உள்ள பிஇடபிள்யூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்குள் பல்வேறு நாட்டவர் சட்டவிரோதமாக குடியேறுவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் 3-வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் வரை 96,917 இந்தியர்கள் சரியான ஆவணங்களின்றி அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.

2019 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது இது 5 மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் 19,883 இந்தியர்கள் மட்டுமே சட்டவிரோதமாகக் குடியேறினர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் முதல்இடத்தில் மெக்சிகோ நாட்டவர் உள்ளனர். 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை 9 லட்சம் மெக்சிகோ நாட்டவர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர்.

அதற்கடுத்து 2-வது இடத்தில் எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்த 8 லட்சம் பேர், அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். 3-வது இடத்தில் இந்தியர்கள் (7.25 லட்சம்)உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.