பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு- அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும்

97 0

திருச்சியைச் சேர்ந்த உதயகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: லால்குடி ஒன்றியம் மருதூர் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் விதிகளை மீறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நீலகண்டன், தங்கப்பொண்ணு ஆகியோருக்கு வீடுகள்ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நீலகண்டன் வீட்டின் புகைப்படம், தங்கப்பொண்ணு மற்றும் வேறு சிலருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கப்பொண்ணு 2020 அக்டோபரில் உயிரிழந்தார். ஆனால், அவர் உயிருடன் இருப்பதுபோல போலி அடையாள அட்டை தயாரித்துள்ளனர். இவ்வாறு பிரதமரின் வீடு கட்டும்திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, திருச்சி எஸ்.பி.மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுநீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்கூறியதாவது: பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஏழைகளுக்குப் பயனளிக்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

இந்த திட்டத்தைக் கண்காணிக்கவேண்டிய மாவட்ட ஆட்சியர், தனது பணியைச் சரியாக மேற்கொள்ளவில்லை. கடைநிலை ஊழியர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது. உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து திருச்சி எஸ்.பி.நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கவேண்டும். திருச்சி லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்படுகிறார்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டமுறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.இந்த முறைகேடு வழக்கை கடைநிலை ஊழியர்களுடன் முடிக்கமுயற்சிப்பது கண்டனத்துக்குரியது. எனவே, முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் வழக்குபதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும். வழக்கு நவ. 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.