ஆதாரம் தந்தால் நடவடிக்கை: கோயில் சொத்துகள் திருடப்படுவதாக குற்றம்சாட்டிய நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

67 0

கோயில் சொத்துக்கள் திருடப்படுவதாக கூறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கான ஆதாரத்தை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பக்தர்களின் குறையை போக்க ‘குறைகளை பதிவிடுக’ என்ற திட்டத்தைஅறிமுகம் செய்தோம். அறநிலைய துறைக்கு தொடர்புடைய 4 கோடிபக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றும் பணிகள் நிறைவுற்றுள்ளன. பல ஆன்மிக புரட்சிகளை திமுக செய்துவருகிறது.

தமிழகத்தில் திமுக இந்துக்களுக்கு எதிரான ஆட்சியை செய்கிறது என்ற பிம்பத்தை மத்தியஅரசு ஏற்படுத்த முற்பட்டது. அதில் படுதோல்வி அடைந்தார்கள். கோயில் சொத்துக்கள் திருடப்படுகின்றன என மத்திய அமைச்சர்நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். உயர் பொறுப்பில் இருக்கும் அவர்உரிய ஆதாரத்துடன் தெரிவித்தால், அதன்மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக முன்வைத்தால், அதற்குண்டான விளக்கமும் தவறு நடந்திருந்தால், அதன்மீதான நடவடிக்கை எடுக்கவும் அறநிலையத்துறை தயாராக இருக்கிறது. கோயில்களை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது.

திமுக ஆட்சி வந்த பிறகு இதுவரை ரூ.627 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில்தான் அறநிலையத் துறைக்கு அதிகஅளவில் மானியம் வழங்கப்பட்டுள் ளது. மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உலோக திருமேனிகள், கற்சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தேவக்கோட்டை கண்டதேவி தேரோட்டம் ஜன. 21-ம் தேதி நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. அறநிலை யத் துறை சார்பில் அமைக்கப்பட்ட குழு, விரைவில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.