ஜூலி சங்கிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்

68 0

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங்கிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

தேவையற்ற பரிந்துரைகள் இராஜதந்திர மட்டத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தும். குழுவின் தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. முறையான விசாரணைகளை முன்னெடுங்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான சந்திம வீரக்கொடி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாராளுமன்றம் எவ்வித கட்டுப்பாடுகளுமில்லாமல்,எண்ணம் போல் செயற்படுகிறது.பாராளுமன்றத்தில் இடம்பெறும் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த மக்களும்  பாராளுமன்ற கட்டமைப்பை வெறுக்கிறார்கள்.தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரது செயற்பாடுகளினால்  பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 9 (அ) பிரிவில் ‘பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை மற்றும் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் வெளியாட்களுக்கு வழங்குவது தண்டனைக்குரிய குற்றம்’ என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைசார் மேற்பார்வை குழுவின் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் கடந்த மாதம் 19 ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஊடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாராளுமன்ற கோட்பாடுகளுக்கு எதிரானது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர’ இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு. வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக எச்சரிக்கை விடுக்க முடியுமா?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் படுகொலை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த படுகொலை தொடர்பில் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு  பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் முற்றிலும் தவறானது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவின் தன்னிச்சையான  தீர்மானங்களினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.