சபை நடவடிக்கையின் போது தொலைபேசி பாவனையை தடை செய்யுங்கள்

70 0

மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுவதை விடுத்து ஆளும் மற்றும் எதிர்தரப்பினருக்கு இடையிலான மோதல் தொடர்பில் ஆராயவே பாராளுமன்றத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நிலைக்கு பிரதமர், சபாநாயகர் உட்பட ஒட்டுமொத்த உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும். சபை நடவடிக்கைகளின் போது தொலைபேசி பாவிப்பதை முதலில் தடை செய்யுங்கள். நிலையியற் கட்டளையை திருத்தி கடுமையான தீர்மானங்களை எடுங்கள் என  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்தின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த மக்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தை மேன்மை பொருந்தியதாகவும்,வெஸ்மினிஸ்டர் முறைமையுடையது என்று குறிப்பிடப்படுகிறது.ஆனால் இன்று பாராளுமன்றத்தில்  கொள்கைகளுக்கு முரணான செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெறுகின்றன.

பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதை விடுத்து.ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான மோதல் பற்றி காலையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு அதிக காலம் செலவழிக்கப்படுகிறது.இவ்வாறான செயற்பாடுகளினால் தான் மக்கள் பாராளுமன்றத்தை வெறுத்து, விமர்சித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதற்கு 225 உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

பாராளுமன்றத்தின் இன்றைய நிலைக்கு  பிரதமர் உட்பட சபாநாயகரும் பொறுப்புக் கூற வேண்டும்.பாராளுமன்ற விவாதத்தை மக்கள் விரும்பி பார்த்த காலமும் உண்டு. ஆனால் இன்று பாராளுமன்றம் தொடர்பான விமர்சனங்கள் மாத்திரமே முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தை பார்வையிட வரும் மாணவர்கள் எதை கற்றுக்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.பாராளுமன்ற விவாதத்தின் போது தொலைபேசியில் உரையாடுவதற்கு முதலில் தடை விதிக்க வேண்டும். பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க  உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலமும் குறைவடையும். பாராளுமன்ற நிலையியற் கட்டளையில் மாற்றம் ஏற்படுத்தியாவது கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.