அதிவேக நெடுஞ்சாலைகளை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தீர்மானிக்கப்படவில்லை. அதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் எந்த ஒரு ஊழியரினதும் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சின் அறிவித்தல் ஒன்றை புதன்கிழமை (22) சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டமொன்று தொடர்பில் அறிவித்து விட்டு அதற்கிணங்க இன்றைய தினம் அவர்கள் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளார்கள்.
பிரவேசப் பத்திரங்களை வழங்கும் உபகரணங்களை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளார்கள்.
வேலை நிறுத்தப் போராட்டம் செய்வது அவர்களது உரிமை. எனினும் சுகவீன விடுமுறையை எடுத்துக் கொண்டு பலவந்தமாக அனைத்து ஊழியர்களையும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இழுத்துள்ளார்கள்.
அது தவறு. அவர்கள் எடுத்துச் சென்றிருப்பது அரசாங்கத்தின் சொத்து என்பதால் அதனை மீண்டும் கையளிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன் அதிகவேக வீதியை பயன்படுத்துபவர்களுக்கு பிரவேசப் பத்திரங்களை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.
அதனை வாய்ப்பாக வைத்து மோட்டார் சைக்கிள்கள் இந்த நெடுஞ்சாலைகளில் பயணிக்குமானால் பெரும் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அத்தகைய நிலையைத் தடுக்கும் வகையில் பொலிசார் மற்றும் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் அரசாங்கத்திற்கு இழக்கப்படும் வருமானத்தை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
சிக்கல்கள் ஏற்படலாம் என்பதை எதிர்பார்த்து அத்துறுகிரிய மற்றும் கொட்டாவ பொலிசில் இந்த நிலைமை தொடர்பில் நாம் முறைப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பிரவேசப் பத்திரங்களை வழங்கும் இயந்திரங்கள் இல்லாமல் பிரவேசப் பத்திரங்களை வழங்குவது தொடர்பான முறைமை ஒன்றை நாம் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எந்த ஒரு ஊழியரினதும் தொழிலுக்கு பங்கம் ஏற்படாது என்பதை நாம் உறுதியாக தெரிவிக்கின்றோம். அதனை நாம் உறுதியாக தெரிவித்தும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் எதுவும் செய்ய முடியாது.
அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் அதன் நிர்வாகத்தை எமது அமைச்சே முன்னெடுக்கின்றது. அந்த வகையில் எந்த ஊழியர்களின் தொழிலும் இழக்கப்பட மாட்டாது என்றார்.