சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 65 நோயாளிகள் பாதுகாப்பாக மீட்பு

119 0

சேலம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 65 நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து போலீஸார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவமனைக்கு தினமும் தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு இரண்டாவது மாடியில் உள்ள எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைப் பிரிவில் 65 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை பிரிவில் ஏசி மிஷினில் இருந்து கரும்புகை வெளியேறியது. பணியில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் புகையை வெளியேற்றிட கண்ணாடி ஜன்னல்களை சுத்தியால் உடைத்து, காற்றோட்டத்தை ஏற்படுத்தினர். உடனடியாக வார்டில் இருந்த 65 நோயாளிகளையும் அங்கிருந்து பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள வார்டுகளுக்கு சிகிச்சைக்கு மாற்றினர். இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடம் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால், பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து மருத்துவமனை ‘டீன்’ மருத்துவர்கள் குழு அமைத்து தீ விபத்து ஏசி மிஷின் பழுதால் ஏற்பட்டதா வேறு காரணமா என்பது குறித்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த தீ விபத்து குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து மருத்துவமனையில் ஏறபட்ட தீ விபத்துக்கு காரணம் ஏசி மிஷின் பழுதானது தானா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தையடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, ஆட்சியர் கார்மேகம் சம்பவ இடம் சென்று நேரில் விசாரணை செய்து, ஆய்வு பணியில் ஈடுபட்டனர். எவ்வாறு மின்கசிவு ஏற்பட்டது என்பது குறித்தும், மருத்துவமனை முதல்வர் மற்றும் பொதுப் பணித்துறையின் மின்பிரிவு அலுவலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கேட்டறிந்தார்.

மேலும், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இதனால் எவ்வித இடையூறுகளும் இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்தும், நிகழ்விடத்தில் மீண்டும் இயல்பான மருத்துவச் சேவைகளை உடனடியாகத் தொடர மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். அதேபோல, ஆட்சியர் கார்மேகம் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை குறித்தும், தீ விபத்து சம்பந்தமாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.