நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் இயந்திரக் கழிவுகளைக் கொண்டு மறுசுழற்சி நடைபயிற்சி பூங்கா

119 0

நெய்வேலியில் இயந்திரக் கழிவுகளைக் கொண்டு மறுசுழற்சி நடைபயிற்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நமது ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் ஒருங்கிணைந்த பங்கு வகிப்பதால் கழிவு மேலாண்மை நமது வாழ்வின் இன்றியமையாத பகுதியாக மாற வேண்டும்.

நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், வரம்பற்ற கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவற்றை முறையாக கையாளாததால், அபாயகரமான விளைவுகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகிறது. எனவே கழிவுப் பொருள் மேலாண்மையில் அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி அவற்றை மக்கள் முறையாக கையாள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

 

 

கழிவுப்பொருள் மேலாண்மை என்பது கழிவுப்பொருட்களை சேகரித்தல், கொண்டு செல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றல், மீள் சுழற்சிக்குள்ளாக்குதல் அல்லது நீக்குதல் மற்றும் கழிவுப் பொருட்களை கண்காணித்தல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். கழிவுகள் திடமாகவோ, திரவமாகவோ அல்லதுவாயுவாகவோ இருக்கலாம். ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறு அகற்றல் மற்றும் மேலாண்மை முறைகள் உள்ளன. தொழிற்சாலை, உயிரியல், வீடு, நகராட்சி, கரிம, உயிரியல் மருத்துவம், கதிரியக்கக் கழிவுகள் உட்பட அனைத்து வகையான கழிவுகளையும் கழிவு மேலாண்மை கையாள்கிறது.

 

அந்த வகையில், தொழிற்சாலைக் கழிவுகளும் சுற்றுச்சூழலுக்கு சவாலாக உருவெடுத்து வருகிறது. அதனையும் பாதிப்பில்லாத வகையில் கையாள கழிவு மேலாண்மை திட்டத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் தேங்கும் இயந்திரக் கழிவுகள் அல்லது தேவையற்றது என ஒதுக்கப்பட்ட இயந்திர பாகங்களை ஒன்றிணைத்து அழகிய கலைப் பொருளாக உருமாற்றி பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள அந்த பூங்காவுக்கு மறு சுழற்சி ராட்டைப் பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது.

 

 

அதில் சிறுவர்களுக்குப் பிடித்தமான அழகிய மான்கள், மயில், சிங்கம், ரோபோ, காளை, பைக் உள்ளிட்டவை கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றைச் சுற்றி நடைபயிற்சி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வரும் சிறுவர்கள் பொம்மைகளை பார்க்கலாம், தொடக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில், பூங்கா நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள சிங்கத்தின் வாலைப் பிடித்தால், சிங்கம் கர்ஜிப்பதை போன்ற ஒலி எழுப்பும் வகையில் வடிவமைத்துள்ளனர். இந்த பூங்காவை செயல்படுத்தும் அதிகாரி சுப்பாராவை சந்தித்து மறுசுழற்சிப் பூங்காவின் நோக்கம் குறித்து கேட்டபோது, “உலகளாவிய அளவில் மாசு அதிகரித்து வருவதால், தற்போதைய சூழலில் கழிவு மேலாண்மை அவசியமான ஒன்றாகும்.பொதுத்துறை நிறுவனமான எங்களுக்கும் இதில் பெரும்பங்கு உள்ளது.

 

 

 

 

எனவே நிறுவனத் தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளியின் ஆலோசனையின் பேரில், முறையான கழிவு மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதுடன், மனிதர்கள் மற்றும் பிற அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்யும் வகையில், பூங்கா அமைத்துள்ளோம். மக்கள் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டை நாடுவதால் கழிவு உற்பத்தி குறையும் என்ற விழிப்புணர்வையும் இதன் மூலம் ஏற்படுத்தியிருக்கிறோம்.

இந்த பூங்கா அமைவதில் நிறுவனத்தின் இயந்திரப் பராமரிப்புக் கோட்ட தொழிலாளர்கள் தங்களது கலை நயத்தையும் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சுழலும் ராட்டை தரைத் தளத்தில் இருந்து 8.97 மீட்டர் உயரத்தில் 10.8 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவ.24 முதல் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வரும். காலை 5.30 முதல் 8.30, மாலை 4 முதல் இரவு 8 மணிவரை இந்த பூங்காவை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.