தீயினால் வீடுகளை இழந்த இராகலை தோட்ட மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம்

70 0

இராகலை மத்திய பிரிவு தோட்ட தொழிலாளர்கள் தமக்கான வீட்டு உரிமையை கோரி இராகலை நகரில் வீதிக்கு இறங்கி அமைதி பேரணியுடன் போராட்டம் ஒன்றில் இன்று  திங்கட்கிழமை  (20) ஈடுப்பட்டனர்.

இராகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த (05.07.2023)அன்று 20 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு திடீர் தீ விபத்துக்குள்ளாகி முற்றாக எறிந்து சேதமடைந்தன.

இந்த தீ விபத்து சம்பவத்தில் 20 வீடுகளில் 18 வீடுகள் முற்றாக எறிந்ததுடன் இதில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் நிர்கதிக்கு ஆளாகி இத் தோட்டத்தில் செயலிழந்துள்ள தோட்ட வைத்தியசாலை கட்டடத்தில் அடிப்படை வசதி குறைப்பாடுகளுடன் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இவ்வாறு தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுப்பது தொடர்பில் எத்தகைய முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் தோட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் எடுத்ததாக தெரியவில்லை.

இருப்பினும் தீயிக்கிரையாகி முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ள லயன் குடியிறுப்புக்களை திருத்தி பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ள மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகளை அமைத்து அதில் குடியமர்த்த அரசாங்கம் மற்றும் இன்றைய ஆட்சியில் உள்ள தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதற்கான அழுத்தத்தை கொடுக்கும் வகையில் கடந்த மூன்று மாத காலமாக பொறுமை காத்த பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பதாதைகளை ஏந்தி இராகலை நகரில் அமைதி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ்வாறு அமைதி பேரணியில் ஈடுப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் இராகலை நகரில் மத்திய தபால் அலுவலகத்திற்கு முன் பிரதான வீதி ஓரத்தில் ஒன்று கூடி அமைதியாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நியாயமான உரிமையை கேட்டு அமைதி போராட்டத்தில் ஈடுப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் மத குருக்கள், மக்கள் பிரதநிதிகள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் .