நாட்டில் ஊழல் மோசடி அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இலஞ்ச ஊழல் மோசடித் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் காணப்படுகின்றன. இவற்றைத் துரிதப்படுத்தும் வகையில் மத்தியஸ்த சபைச் சட்டத்தைத் திருத்தியுள்ளோம்.அது மாத்திரமன்றி காணி உறுதிகளை எழுதுதல், உயில் எழுதுதல் போன்ற விடயங்களில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கும் செயற்பாடுகள் அதிகரித்திருந்தன.
இதனைத் தடுக்கும் வகையில் பல வருடங்களாகத் திருத்தப்படாதிருந்த சட்டங்கள் திருத்தப்பட்டன. இந்தத் திருத்தத்தின் ஊடாக எதிர்காலத்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணி உறுதிகளைச் சரிக்கட்டுதல் மற்றும் உயில் தொடர்பான ஆவணங்களைத் தயாரித்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.
கடந்த வருடத்தில் வீதியில் இறங்கிப் போராடிய மக்களும் இவ்வாறான மாற்றத்தையே பெரும்பாலும் எதிர்பார்த்திருந்தனர்.
அரசாங்கம் என்ற ரீதியில் குறிப்பாக நீதி அமைச்சர் என்ற ரீதியில் நான் இதற்கான நீதித்துறையை வலுப்படுத்த பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளேன் என்பதில் பெருமை கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.