கொஸ்கொட மற்றும் தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (19) மாலை தொம்பே, தெமலகம, கட்டுலந்த வீதியில் தெமலகமவில் இருந்து கட்டுலந்தை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியின் இடதுபுறமாக பயணித்த பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி அதே முச்சக்கரவண்டியில் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்
தெமலகம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் விபத்துக்குள்ளான சாரதி முச்சக்கர வண்டியுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொம்பே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று காலை கொஸ்கொட, காலி – கொழும்பு பிரதான வீதி புத்தகொட சந்திக்கு அருகில் காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பெந்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சாரதி உயிரிழந்துள்ளார்.
டயகம, கல்பட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.