மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அர்ஜுன ரணதுங்க

70 0

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பித்தமை தொடர்பான மனு இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணவினால், கடந்த 16ஆம் திகதி மனுவை விசாரணைக்கு அழைத்தபோது மனு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இன்று (20) வரை மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அதன் நடவடிக்கையை தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீடிக்காமல் இருப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்த மனு விசாரணையில் இருந்து மூன்று நீதிபதிகள் விலகியதன் காரணமாக கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன விசாரணையில் இருந்து விலகிய பின்னர் அந்த மனுவை பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட சோபித ராஜகருண மற்றும் தம்மிக கணேபொல அடங்கிய நீதிபதிகள் அமர்வுகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக நீதிபதி தம்மிக கணேபொல விலகினார்.

இதன்படி மனுவை பரிசீலிக்க நீதிபதிகளான டி. என். சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து நீதிபதி நீல் இத்தவெலவும் விலகினார்.

இதன்படி, சம்பந்தப்பட்ட மனு நீதிபதிகளான சோபித ராஜகருண மற்றும் டி. என். சமரகோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.