போக்குவரத்து ஊடக அமைச்சரினால் பொத்துவில் பஸ் டிப்போ தரம் உயர்த்தப்பட்டது

101 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரபின்  முயற்சியில் பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக ஞாயிற்றுக்கிழமை (19)  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவால் தரம் உயர்த்தப்பட்டது.

புதிய பொருளாதார மூலோபாயங்களை வலுப்படுத்துவதற்காக பொத்துவில் மற்றும் அறுகம்பே சுற்றுலா வலயத்தை ஒருங்கிணைத்து போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக நேற்று தரம் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பொத்துவில் பஸ் டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சரினால் நவீன சொகுசு பஸ் வண்டி வழங்கி வைக்கப்பட்டதுடன் 60 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லும் நட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,

பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டபிள்யு. டி.வீரசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பொறியியலாளர் லலித் டி அல்விஸ், போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையில் குறித்த பஸ்டிப்போவின் துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முதற்கட்ட நிதியாக சுமார் 60 மில்லியன் ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் எம் முஷாரப் அவர்களின் வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.