தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் தொடர்பில் நீதியமைச்சருடனும்,தேசிய நல்லிணக்கத்தை பாடசாலை மட்டத்தில் அமுல்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சருடனும் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒரு சில அரசியல் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்கள் ஏனைய மதத்தை அல்லது இனத்தை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் இது தொடர்ந்தும் இடம்பெருமானால் இந்த நாடு பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து மீளாது எனவும் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையில் கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.
இந்தக் கூட்டத்தில் நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு,சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லினக்கத்துக்கான அலுவலகம் என்பவற்றின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த குழுவின் தலைவர்,கடந்த ஓரிரு மாதங்களாகப் பார்க்கும் போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மீண்டும் பிரயோக ரீதியாக செயல்படுத்துவதற்கு தேவையான விடயங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளது என்றும் சில அரசியல் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்கள் ஏனைய மதத்தை அல்லது இனத்தை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் இது தொடர்ந்தும் இடம்பெருமானால் இந்த நாடு பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அளிக்க மாட்டாது எனத் தெரிவித்தார்.
அதனால் இந்த சட்டமூலத்தை மேலும் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தக் குழுவின் ஊடாக மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன்,தேசிய ஒற்றுமை மற்றும் நல்லினக்கத்துக்கான அலுவலகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய இந்த சட்டமூலத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள குறிக்கோளான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய தேசிய கொள்கையை தயாரிப்பதன் அடிப்படை விடயங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அதனை எதிர்வரும் தினங்களில் வெளியிட முடியும் எனவும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லினக்கத்துக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கான சிறந்த தளம் பாடசாலைக் கட்டமைப்பு எனச்சுட்டிக்காட்டிய குழு இந்தச் சட்டத்தில் பாடசாலைக் கட்டமைப்பை சட்டரீதியாக எவ்வாறு இணைத்துக்கொள்ள முடியும் என குழு வினவியது. கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்துடன் இணைந்து இலங்கையிலுள்ள 67 மும்மொழிப் பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுடன் இணைந்து ஆரம்பகட்ட வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாக தேசிய ஒற்றுமை மற்றும்நல்லினக்கத்துக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்துக்கு தேவையான திருத்தங்களுக்காக அரசாங்கத்துக்கு பரிந்துரை வழங்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அத்துடன் இது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும்,துறைசார் மேற்பார்வைக் குழுவின் அடுத்த கூட்டங்களில் இளைஞர்பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்வதக்கவும் குழுவின் தலைவர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.