சித்தங்கேணி இளைஞர் உயிரிழப்பு – வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலா காரணம்?

65 0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற களவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளைஞனின் உறவினர் ஒருவர் கூறுகையில்,

அலெக்ஸிடம் லான்ட் மாஸ்டர் வாகனம் ஒன்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி மரம் கடத்தல் சம்பந்தமான விசாரணை ஒன்று உள்ளதாக தெரிவித்த வட்டுக்கோட்டை பொலிஸார் அலெக்ஸை கைது செய்தனர்.

அவ்வேளை, அலெக்ஸ் பொலிஸ் நிலையம் செல்ல மறுக்க, அவருக்கு துணையாக அவரது நண்பனையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், நாங்கள் இரவு பொலிஸ் நிலையம் சென்றவேளை அலெக்ஸின் கதறல் சத்தம் பொலிஸ் நிலையத்திலிருந்து கேட்டது.

நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தோம்.

8ஆம் திகதி கைது செய்யப்பட்ட அலெக்ஸ் 12ஆம் திகதி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது அவர் மீது நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இதன்போது அலெக்ஸின் உடல்நிலை சீரின்றி காணப்பட்டது.

அவர் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்தார் என்றார்.

நேற்றைய தினமும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் உள்ள புதர் ஒன்றில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி பொன்னாலை சனசமூக நிலையத்துக்கு சேதம் விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை பொலிஸார் அழைத்துச் சென்றதாக அப்பகுதி கிராம சேவகர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து சந்தேகத்தை எழுப்புவதாக கூறப்படுகிறது.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.