பொருளாதார வீழ்ச்சியினால் பின்னடைந்து போயுள்ள நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே இந்த வரவு செலவு திட்டம் பார்க்கப்பட்டாலும், நாட்டை மீட்க வேண்டும் என்பதற்காக மக்களது முதுகில் வரிக்கு மேல் வரிகளை சுமத்தியேனும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களையும் தன்னை பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்களையும் திருப்திப்படுத்த ஜனாதிபதி மேற்கொள்ளும் சாமர்த்தியமான முன்னெடுப்பாகவே இதனை காண்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அலிஸாஹிர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாடு மிகவும் கடுமையான பொருளாதார பின்னடைவுகளை எதிர்கொண்டு அனைத்துமே சீர்குலைந்து காணப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் யார் என இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் நீநி அரசர்கள் தங்களது தீர்ப்பினை வெளிப்படுத்தி இருக்கின்ற நிலையிலே ஜனாதிபதி நிதி அமைச்சர் என்ற வகையில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உயர் சபையில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டமானது பொருளாதார வீழ்ச்சியினால் பின்னடைந்து போயுள்ள நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே பார்க்கப்பட்டாலும், நாட்டை மீட்க வேண்டும் என்பதற்காக மக்களது முதுகில் வரிக்கு மேல் வரிகளை சுமத்தியேனும் இந்த பின்னடைவுக்கு காரணமானவர்களையும் தன்னை பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்களையும் திருப்திப்படுத்த ஜனாதிபதி மேற்கொள்ளும் சாமர்த்தியமான முன்னெடுப்பாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
நாடும் நாட்டு மக்களும் வரலாறு காணாத பொருளாதார பின்னடைவினை எதிர்கொண்டு அதளபாதாளத்திலே தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் மக்களது விடிவுக்கும் தீர்வுகளை நிறைவாக கொண்ட ஒரு வரவு செலவுத் திட்டம் இம்முறை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் என பாரிய எதிர்பார்ப்புக்களோடு காத்திருந்த அனைவருக்கும் பெரும் ஏமாற்றங்களை தந்த வரவு செலவுத் திட்டமாகவே இதனை பார்க்கப்பட வேண்டியுள்ளது.
75 ஆண்டுகளாக நாம் வருமானத்துக்கு ஏற்ப செலவிடவில்லை எனவும், வீண் செலவுகளை மேற்கொண்டு தேர்தல்களை வெற்றி கொள்வதனை மாத்திரம் இலக்காக கொண்டு சலுகைகளையும் நிவாரணங்களையும் முன்வைத்து, பொருட்களின் விலைகளை குறைத்து சம்பள அதிகரிப்பை செய்து அரசியல் இருப்பிற்கான வரவு செலவு திட்டங்களையே முன்வைத்து வந்துள்ளதாக அடுத்தவர்களை குற்றம் சுமத்தும் ஜனாதிபதி, தன்னுடைய 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்வைப்பிலே அடுத்தவர் மீது விரல் சுட்டிவிட்டு தானும் அதே பாணியையே கடைப்பிடித்து தனது எதிர்கால தேர்தல் வெற்றியினையும் அரசியல் இருப்பினையும் இலக்காக கொண்டதுடன், தன்னை பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் அன்றைய அரச பிரதிநிதிகளையும் அவர்களது பின்புலம் கொண்டவர்களையும் திருப்திப்படுத்தும் அரசியல் நகர்வினையே தானும் பிரதானமாக்கியுள்ளார்.
நாட்டினது பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்து நாட்டினை வங்குரோத்து நிலைக்கு ஆளாக்கி மக்களை பாகுபாடின்றி எரிபொருளுக்கும் அத்தியாவசிய பொருட்களுக்குமாக வரிசையிலே நிறுத்தி, முழு நாட்டையும் இருளிலே மூழ்கச் செய்து கல்வி சுகாதாரம் விவசாயம் என அனைத்து துறைகளையும் முடங்கச் செய்து இந்நாட்டின் பொருளாதார அழிவுக்கும் வங்குரோத்து நிலைமைக்கும் காரணமானவர்கள் என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டவர்களையும், அக்குற்றவாளிகளது பின்புலத்தை கொண்டவர்களை காப்பாற்றிடவும், அவ்வாறானவர்களை மகிழ்வித்து தனது இருப்பினை தக்கவைக்கவும் இந்த வரவு செலவு திட்டத்தினை அரசியல் எதிர்பார்ப்பினை அடித்தளமாக கொண்டு சமர்ப்பித்துவிட்டு “அரசியல் நோக்கத்துக்காக மாயைகளை பரப்புவதை நிறுத்துங்கள்'” என ஜனாதிபதி ஏனையவர்களை பார்த்து கோருவது பெரும் வேடிக்கையாக உள்ளது.
அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை விமர்சித்தவராக நாட்டிலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக கூறும் ஜனாதிபதி, அதே அரசியல் நோக்கத்தை இவ்வரவு செலவுத் திட்டத்திலே கடைப்பிடித்து, வெறும் வார்த்தை ஜாலங்களையும் பசப்பு வார்த்தைகளையும் கூறி, நாட்டை மீட்பதை விடவும் தன்னுடையதும் தன்னை பதவியில் நிலை நிறுத்தியவர்களினதும் இருப்பில் தனது கவனத்தை குவித்துள்ளமையையே இந்த வரவு செலவுத் திட்டம் வெளிப்படுத்தி நிற்கிறது.
நாட்டின் அப்பாவி மக்கள் மீது வரிச்சுமைகளை அடுக்கடுக்காக சுமத்தி, மக்களை மேலும் மேலும் நலிவடையச் செய்வதனை தவிர்த்து அன்றைய அரசியல்வாதிகளாலும் ஊழல் பேர்வழிகளாலும் நாட்டுக்கு வெளியிலே குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணங்களையும் முறையற்ற வகையிலே சேர்க்கப்பட்ட சொத்துக்களையும் சுவீகரிக்க வேண்டும்.
எந்த திருடர்களையோ ஊழல் பேர்வழிகளையோ பாதுகாக்க முற்படாமல் நாட்டை முன்னேற்ற திறந்த மனதுடன் செயலாற்றுவதை நிரூபிக்க வேண்டும்.
தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே முக்கியம் எனவும் சமநிலை தத்துவத்தின் பிரகாரம் நாட்டின் வெற்றிக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஜனாதிபதி, உண்மையிலேயே இது நாட்டை வெற்றிகொள்ள சமநிலை வாழ்வின் அடிப்படையில்தான் உள்ளதா என தனது மனசாட்சியினை உரசிப்பார்த்து விடையளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.