சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான 22 இந்திய மீனவர்களும் விடுதலை

92 0

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் மீனவர்கள் பயணித்த படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நாட்டின் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்டதாகவும் குறித்த படகு நேற்று சனிக்கிழமை (18) காலை இலங்கை கடற்படையினரால் பழுது பார்க்கப்பட்டு கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டதாகவும் இலங்கை கடற்படை ஊடகப்பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்த இந்திய மீனவர்கள் 22 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படாமல் உடனடியாக நேற்று காலை விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கடற்படை ஊடகப்பேச்சாளாரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்காக நாட்டின் கடற்பரப்பிற்குள் கடற்படையினர் தொடர்ச்சியாக ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் வடக்கு கடற்படை கட்டளைப்பிரிவு யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று முன்தினம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த 22 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதுடன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட கடற்படையினர் நடவடிக்கை எடுத்ததாக  கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டிருந்தது.

சந்தேக நபர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் குறித்த 22 பேரும் நேற்று காலை  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படாத நிலையில் இலங்கை கடற்படையினரால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர்  கேப்டன் இந்திக டி சில்வாவிடம்  வினவினோம். அதற்கு பதிலளித்த அவர் குறிப்பிட்டதாவது :

முன்னதாக சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதற்கமைவாகவே சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருந்தோம். இருப்பினும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின்போது அவர்கள் பயணித்த படகு இயந்திர கோளாறு காரணமாக நாட்டின் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்டதாக தெரியவந்தது. இந்நிலையில், குறித்த படகு நேற்று காலை இலங்கை கடற்படையினரால் பழுது பார்க்கப்பட்டு மீள அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தோம் என்றார்.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட  196 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து  29 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்