வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக நீடித்து வந்த சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இலங்கை இராணுவத்தால் 1990ஆம் ஆண்டில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 33 வருடங்களாக தற்காலிக முகாம்களில் வசித்து வரும் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அழைப்பின் பேரில் நேற்று சனிக்கிழமை (18) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையிலான குழுவினர், குறித்த மக்கள் வெள்ளத்தினால் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையம் உட்பட அவர்கள் வசிக்கும் முகாம்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த முகாம்களில் வசிக்கும் பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பலர் டெங்கு தாக்கத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.
இதன் அடிப்படையில், மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் ஆபத்தான குடிசைகளிலும் இடிந்து விழக்கூடிய வீடுகளிலும் வசித்து வரும் மக்களின் தற்போதைய தேவை தொடர்பில் மெசிடோ நிறுவனத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
இந்த முகாம்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மழைக்காலங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் நிலையில், சிலருக்கான காணிகள் அவர்களது சொந்த நிலங்களை தவிர்த்து வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட போதிலும் வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கத்தால் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இதனால் புதிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அந்த மக்கள் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
மெசிடோ நிறுவனம் கடந்த வருடமும் மக்களின் கோரிக்கைக்கு அமைய, பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியது. அதேபோல இம்முறையும் அந்த மக்கள் வெள்ளப் பாதிப்பை தற்காலிகமாக சமாளிக்கும் வகையிலான உதவிகளை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு நிறுவனத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.